முகப்புகோலிவுட்

கவிஞர் வாலி - பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

  | October 29, 2017 14:20 IST
Lyricist Vaali Songs

துனுக்குகள்

  • வாலி வார்த்தைப்பிரயோகத்தில் பலே கெட்டிக்காரர்
  • வாலி பல தலைமுறைகளுக்கான பாடலாசிரியர்
  • பாமரனுக்குப் புரியும் துள்ளலான பாடல்களை எழுதினார் வாலி
ஒரு முறை மதன் கார்க்கி கவிஞர் வாலியிடம் "கண்ணதாசன் கூட எழுதினீங்க, அப்பா கூட எழுதினீங்க, இப்போ என்கூடயும் எழுதுறீங்க" என்று சிலகாத்திருக்கிறார். அதற்கு, "உன் மொவனும் வரட்டும்,போட்டி போட்றேன்" என்று சொல்லியிருக்கிறார் இந்த தலைமுறைகள் கடந்த தலைமகன். ஆம், வாலி தலைமுறைகளின் கவிஞன். பல தலைமுறைகளுக்கான பாடலாசிரியர்.

கவிஞர் வாலி மீதான மிகப்பெரிய மாற்றுக்கருத்து அவரது பாடல்களின் தரத்தை வைத்து சொல்லப்படுவதுண்டு. தரம் என்பது இங்கு எதைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்த்தால் கவித்துவமும், அழகியலும் தான். அதற்கான கவிஞர்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடக்க பாமரனுக்குப் புரியும் துள்ளலான பாடல்களை எழுதினார் வாலி. "நான் மாஸுக்கும் காசுக்கும் தான்யா பாட்டெழுதுறேன்" என்று வெளிப்படையாகவே ஒற்றுக்கொண்டார். கதைக்களமும், இயக்குனரின் எண்ணமும் ஒரு பாடலுக்கான விதை. அதை விருட்சமாக்குவது கவிஞனின் கதை. வாலியின் கற்பனைத்தமிழுக்கு ஒரு கூட்டம் என்றால் அவரது விற்பனைத்தமிழுக்கு இன்னொரு பட்டாளம். இந்த இரண்டையுமே இறுதி வரை சமமாக கையாண்டார் வாலி. அதனால் தான் கடைசிக்காலத்தில் "நேற்று அவள் இருந்தாள்" என்றும் "சோனாப்பரியா" என்றும் ஒரே படத்தில் பாடல் எழுத முடிந்தது.

வாலியின் கற்பனைத்தமிழையும், அழகியல் சார்ந்த கவித்துவத்தையும் விட்டுவிட்டு தமிழிசைப்பாடல்களின் அழகை எழுதி விட முடியாது. வாலி வார்த்தைப்பிரயோகத்தில் பலே கெட்டிக்காரர். எதைக்கொண்டு வந்து எங்கே கோர்த்துவிடுவது என்பதை நன்கறிந்த மொழிக்காரர்.
வாலியின் அழகியலுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு

பெண்ணின் இடையை வர்ணிக்க எத்தனையோ பிரயோகங்கள் இருந்தாலும் இவர் பயன்படுத்தும் சொல் 'நூலகம்'.

"இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்"
(ரோஜா ரோஜா - "காதலர் தினம்")

"இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்'
(ஒரு ஊரில் - "குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்")


'நூலகம் என்பது ஒரு திரட்டு. ஆவணங்கள், நூல்கள் என ஓரிடத்தில் சேமிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இடம். இதைக்கொண்டு போய் ஒரு பெண்ணின் இடையோடு ஒப்பிட்டதை எண்ணிப்பார்த்தால் இங்கு அவரது மொழியறிவு வேறு பாதைக்கு செல்கிறது.

மெல்லிடை, சிற்றிடை என்றே பழக்கப்பட்ட தொனிக்கு 'நூலகம் போன்ற இடை' என்பது அதே வரிசையில் வரும் புதுமை. 'குறுக்குச் சிறுத்தவளே' என்று வைரமுத்துவும் கூட பாடினார். அழகு என்பது அளவுகளில் இல்லை என்பதை அனைவருமே அறிந்திருந்தாலும் சிறிய இடை அழகென்ற தோற்றத்தை வெறும் கவிதைக்காக சொல்லி அதுவே அழகாகிவிட்டது.

வாலி இங்கு ஏன் 'நூலகம்' என்று சொல்கிறார் ? வாலி சொல்லும் நூலகத்தை "நூல்+அகம்" என்று பிரித்தால் "நூல் போன்ற, நூலின் அளவிலான மெலிதான ஓரிடம்" என்ற ஒரு பொருள் வருகிறது. "நூல் போன்ற மெலிதான இடை"

அடுத்த வரிகளில் வாசிப்பதைப்பற்றி எழுதுவது மடியில் கிடந்து வாசிப்பது, இடை சாய்ந்து படிப்பது என்று கொள்ளலாம்.

பெண்ணின் இடையை பல உருவங்களில் சொல்லிவைத்த தமிழ் இலக்கியம் வாலியின் விரல்களில் "நூலகம்" என்றொரு சொல்லையும் பெற்றுக்கொண்டது.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று பாடல் எழுதியது மட்டுமல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தமிழ் எனும் மூன்றெழுத்தை திரைப்பாடல்கள் மூலம் நேசித்தவர் கவிஞர் வாலி.

ஒவ்வொரு கலைஞனின் மரணமும் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று சொல்வார்கள். வாலியின் மரணம் உண்டாக்கிய வெற்றிடத்தை வாலியால் மட்டுமே நிரப்ப முடியும்.

வாலியின் பிறந்தநாள் இன்று

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்