முகப்புகோலிவுட்

"பேரன்பை புரிந்துகொள்ள நிறைய முயற்சிப்போம்" - மாரிசெல்வராஜ்

  | January 28, 2019 11:33 IST
Peranbu Movie

துனுக்குகள்

  • பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர்.
  • பேரன்பு படத்தை இயக்கியவர் ராம்.
  • மம்முட்டி பேரன்பு படத்தில் நடித்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ராம் இயக்கத்தில் தற்போது வெளியாக இருக்கும் பேரன்பு திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் கூறுகையில்,

"பிப்ரவரி -1 அன்று இயக்குநரின் நான்காவது படமாக பேரன்பு வெளியாக இருக்கிறது. நான் உதவி இயக்குநராக வேலை செய்த படம். இன்னும் உதவி இயக்குநராகவே வேலை செய்யும் படம். இந்தியாவின் ஆகசிறந்த நடிகர் மம்முட்டியின் பக்கத்திலிருந்து அவரது உடல் அசைவிலிருந்து குட்டி குட்டி சிரிப்பிலிருந்து சிந்தாத கண்ணீரிலிருந்து எப்போதாவது விரியும் அவருடைய கண்களிலிருந்து பெரும் திரைக்கான நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்ட படம். இதயத்திலிருந்து ஒரு சினிமா எடுப்பது என்பது நம் காதலி விரும்பி அதோ அது என்று அடையாளம் காட்டி அடம்பிடித்து கேட்ட ஒரு பட்டாம்பூச்சியை துரத்தி பிடிப்பதற்கு சமமானது என்பதை இயக்குநரின் அர்ப்பணிப்பான உழைப்பிலிருந்து கற்றுக்கொண்ட படம்.
ஒரு சிட்டுகுருவி பறப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

அங்கே ஒரு வெள்ளைக்குதிரை உருண்டு புரள்கிறது.

ஒரு வீடு இருட்டில் இருப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

அங்கே ஒரு காடு தன் ஆதி இருட்டோடே வாழ்கிறது.

ஒரு ஓடம் மட்டுமே மிதப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

அங்கே ஒரு ஏரி தனித்து கிடக்கிறது.

அந்த வீட்டுக்குள் நெயில்பாலிஷ் கொட்டிக்கிடப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

அந்த வீட்டுக்குள் ஒரு மகள் வளர்கிறாள்.

ஒரே ஒரு கல்லில் ஒரே ஒரு மகள் அமர்ந்திருப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

அங்கே ஒரே ஒரு மலையில் ஒரே ஒரு அப்பா அமர்ந்திருக்கிறார்.

இன்னும் நட்சத்திரங்களை எண்ணுவதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

இன்னும் நிமிர்ந்து பார்த்தால் வானம் தான் தெரிகிறது. அதில் நட்சத்திரங்கள் தான் கிடக்கிறது.

இன்னும் அப்பா மகள் அன்பை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?

இன்னும் அப்பாவுக்கு ஒரு மகள் கிடைக்கிறாள், மகளுக்கு ஒரு அப்பா கிடைக்கிறார்.

இதயத்திலிருந்து கேட்கும் இப்படியான நிறைய கேள்விகளும் பதில்களும் தான் நிறைந்து உறைந்து கிடைக்கிறது இயக்குநரின் பேரன்பில். அன்பை புரிந்துகொள்ள கொஞ்சமாக பழக்கப்பட்ட நாம் பேரன்பை புரிந்துகொள்ள நிறைய முயற்சிப்போம். கொண்டாடுவோம். நன்றி" என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்