முகப்புகோலிவுட்

இறந்த பின்பும் நடித்த சீதக்காதி "நாகேஷ்"

  | January 31, 2019 16:34 IST
Nagesh

"நாகேஷ்" எனும் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... கலைக்கும், கலைஞனுக்கும் என்றும் அழிவில்லை................!

இறந்த பின்பும் அவரது ஆத்மா நடிகனாக நடிப்பதை "சீதக்காதி" திரைப்படத்தில் பார்த்திருப்போம். அதை அப்படியே நாகேஷ் அவர்களுக்கு பொருத்தி பார்த்தால் அவர் தான் உண்மையான சீதக்காதி என்பது நமக்கு புரியும்.

3uj96d2o


நாகேஷ்.... கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இந்திய நடிகர்களில் நாகேஷ் அவர்களுக்கு தனி இடம் உண்டு. நகைச்சுவை, கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் சிறப்பை நிரூபித்தவர். தன்னுடைய ஆரம்ப காலங்களில் மேடை நாடகத்தில் நடித்து கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை அவரது நாடகத்தை பார்த்துள்ளார். அந்த நாடகத்தில் நடித்த நாகேஷை அவர் மிகவும் பாராட்ட, அந்த பாராட்டு அவரை மேலும் பல நாடகங்களில் நடிப்பதற்கு உத்வேகம் கொடுத்துள்ளது. தன்னுடைய நடிப்பாலும், முயற்சியாலும் மெல்ல மெல்ல உயர்ந்து ஒருநாள் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். ஆரம்ப காலத்தில் வாலி, இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் சென்னையில் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியுள்ளார். பின்னாளில் இந்த மூவரும் அவரவர் துறையில் உச்சம் கண்டனர்.

1958 முதல் சிறு சிறு வேடங்களில், திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தவருக்கு 1964ல் வெளிவந்த "சர்வர் சுந்தரம்" மிகப்பெரிய திருப்பத்தை தந்தது.

ne060iu


ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் ஒருவன் நாடே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறும் கதையான சர்வர் சுந்தரத்தில் நாகேஷ் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த படம் கிட்டதட்ட அவரது நிஜ வாழ்கையை ஒத்து இருந்தது. அந்தப் படத்திற்கு பின் அவருக்கு ஏறுமுகம் தான். ஒரு வருடத்தில் 30 படங்களுக்கு மேலும் , ஒரே நேரத்தில் 6 படங்களும் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருவரானார் "நாகேஷ்". உடல் அசைவு, முகபாவணை, வசன உச்சரிப்பு என தனக்கென தனி அடையாளம் கொண்டவர், யாரோடு சேர்ந்து நடித்தாலும் அவர்களது நடிப்பை ஓரம் கட்டிவிடும் திறமை படைத்தவர். திருவிளையாடல் படத்தில் சிறு கதாபாத்திரம் தன் என்றாலும் "தருமி" எனும் பெயரை யாரும் மறக்க முடியாத அளவிற்கு மாற்றியது "நாகேஷ்" அவர்களின் நடிப்பிற்கு சிறிய உதாரணம்.

omm4eorg


முழுக்க முழுக்க சாதுவாகவும், அப்பாவியாகவும் அவர் நடித்து, K. பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய எதிர் நீச்சல் திரைப்படம் அவர் நடிப்பிற்கு ஒரு பதம். நாகேஷ் அவர்கள் அந்த காலத்திலேயே கிறித்துவ பெண்ணை மணந்து, மதம் எனும் கட்டுபாட்டை உடைத்தவர். 70' களில் அவருக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே விரிசல் வந்தது எனும் வதந்தியால் எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. அவரது நடிப்பு வாய்ப்புகள் பறிபோக தீராத பண கஷ்டத்திற்கு உள்ளானார். அதன் பின் 1972ல் இருவரும் சேர்ந்து பேசி சுமூகமான நட்பு உண்டாக, மீண்டும் உலகம் சுற்றும் வாலிபன், நல்ல நேரம் என தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சர் ஆனதும், மீண்டும் தயாரிப்பாளர் அவர்களால் ஒதுக்கப்பட்டார்.

அதன் பின் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். சிறிய வேதங்கள் தான் என்றாலும், அவர் எதையும் ஒதுக்கவில்லை. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "தில்லுமுல்லு" படத்தில் நடிகர் நாகேஷ் ஆகவே நடித்து "அது தான் நாகேஷ்" எனும் வசனத்தை போலவே தன்னை காலத்திற்கு ஏற்றாற்போல் நிரூபித்தார். பின் 1985 இல் தன் மகன் ஆனந்த் பாபுவை வைத்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் படத்தை தயாரித்து, இயக்கி மிகப்பெரும் கடனாளி ஆனார். மீண்டும் அபூர்வ சகோதரர்கள் மூலம் வில்லனாக புது அவதாரம் எடுத்து அதிலும் தன் நடிப்பை நிரூபித்தார். 90' களில் கமலஹாசனுக்கும் , அவருக்குமான நட்பு அதிகமானது. கமலின் படங்களில் கண்டிப்பாக நாகேஷ் இருக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு இருந்தது. அதுவும் குருவிற்கும், சிஷ்யனுக்கும் இருப்பது போல்.

6nt25gm


அவரது தொடர் வாய்ப்புகள் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகர் ஆனார். சினிமாவை நேசித்த நடிகன் எனும் காலம் போய், சினிமாவே நேசித்த நடிகன் எனும் சொல்வது போன்றது அந்த காலம். அவர் மகனை முன்னணி நடிகராக கொண்டு வரமுடியாதது, கடன், மகனின் போதை பழக்கம் என தன் வாழ்வில் எவ்வளவு சோகம் இருந்தாலும், அத்தனையும் வெளியே தெரியாமல் மக்களை மகிழ்விப்பதில் கருத்தாக இருந்தார்.

1994ல் வெளியான "நம்மவர்" திரைப்படத்தில் நடித்தமைக்கு, சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அவரின் கடைசி காலங்களில் அவர் கூட நடிப்பதை நடிகர்கள் பெருமையாக கருதினர். விஜய், அஜித் குமார், சிலம்பரசன் என பல அன்றைய முன்னணி கதாநாயகர்களும் அவருடன் இணைந்து நடித்தனர்.

3kg66u88


நாகேஷ் அவர்கள் இறக்கும் சில நாட்கள் முன்பு வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டுதான் இருந்தார். 2000 களில் அவர் நடித்த பஞ்சதந்திரம், வசூல் ராஜா போன்ற படங்கள் அவரது வயதை மறைத்து ரசிக்க வைத்தது. பல படங்களில் மனோரமா அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் நாகேஷ். கடைசியாக இம்சை அரசன் 23ம் புலிகேசியில் இணைந்து நடித்து அவர்களின் கூட்டணி பயணம் முடிந்தது.
 

eg01o15


2008ல் வெளியான தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான "தசாவதாரம்" திரைப்படத்தில் K.R. விஜயா அவர்களுடன் இணைந்து நடித்தார். அது தான் அவரது கடைசி படமாகவும் அமைந்தது. சர்வர் சுந்தரம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நாகேஷ் தசவாதாரம் மூலம் தன் திரை பயணத்தை முடித்து கொண்டார். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு படத்திலும் நாகேஷ் அவர்களுடன் இணைந்து நடித்தவர் K.R.விஜயா.

ta5r1bng


1000 படங்களுக்கு மேல் படங்கள் நடித்திருந்தாலும் கடைசி வரை களைக்காமல் நடித்து முடித்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31இல் தனது 75 வது வயதில் மீளா உறக்கத்திற்கு சென்றார். அவரின் சாதனைகள் பல. அவருக்கு அவரே நிகர். 2013 இல் அவரின் நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது.

n6042n5g


மகளிர் மட்டும் படத்தில் ஒரு உயிரற்ற பிணமாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். உயிருடன் இருக்கும் ஒருவர் ஒரு பிணம் போல் தத்ரூபமாக நடித்திருந்தார் என பலரின் பாராட்டை அப்போது நாகேஷ் அவர்கள் பெற்றார். ஆனால் 2014ஆம் ஆண்டு, சரியாக அவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டெக்னாலஜி மூலம் மீண்டும் நடிகனாக உயிர்பெற்றார்.இது ரஜினிகாந்த் அவர்களின் "கோச்சடையான்" அனிமேஷன் படம் மூலம் சாத்தியமானது. நாடகம், கருப்பு வெள்ளை திரைப்படம், கலர் திரைப்படம், சினிமா ஸ்கோப், ஸ்டியரோ, DTS, அனிமேஷன், 3D என அனைத்தையும் பார்த்த நடிகன் எனும் பெருமையை பெற்றார் நாகேஷ் அவர்கள். காலம் மாறினாலும் மாறுதலுக்கேற்ப எப்போதும் "நாகேஷ்" எனும் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... கலைக்கும், கலைஞனுக்கும் என்றும் அழிவில்லை................
 

dn62che8
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்