முகப்புகோலிவுட்

ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

  | November 08, 2019 17:43 IST
Nayanthara

துனுக்குகள்

 • ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.
 • இப்படத்துக்கு மூக்குத்தி அம்மன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
 • இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர் நடிகை நயன்தாரா. 15 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவர், தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர், குறிப்பிட்டு சில நல்ல கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.

சமீபத்தில் ‘கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் காலேஜ் படிக்கும் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்திருந்தார். அதில் முன்னணி கதாநாயகர்கள் யாருமின்றி, காமெடியில் கலக்கிவரும் யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல், பல படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வளர்ந்துவரும் கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
அவர் விஜயுடன் நடித்து வெளியான ‘பிகில்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் முன்னதாக நானும் ரௌடி தான், வேலைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த ஆர்.ஜே. பாலாஜி, இந்த ஆண்டு தொடக்கத்தில், தானே எழுதி இயக்கிய ‘எல்.கே.ஜி'படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். அரசியல் கேளிக்கை படமான எல்.கே.ஜி அவருக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் அரசியல் பிரமுகர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘மூக்குத்தி அம்மன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் தான் நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com