முகப்புகோலிவுட்

“மஞ்சள்” நாடகம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுச்சியுரை!

  | October 23, 2019 17:52 IST
Pa Ranjith

துனுக்குகள்

 • மஞ்சல் நாடகம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது
 • மலம் அள்ளும் தொழிலாளர்களின் வலிகளை பதிவு செய்யும் நாடகம் இது
 • கிராமங்களுக்கு இநத் நாடகத்தை கொண்டு போகவேண்டும் - பா.இரஞ்சித்
ஜெய்பீம் மன்றம், அரும்பு மாத இதழ் மற்றும் கட்டியக்காரி நாடகக்குழு இணைந்து ‘மஞ்சள்' என்கிற நாடகம் சமீபத்தில் தொன்பாஸ்கோ அரங்கத்தில் நடைபெற்றது. நாடக இயக்குநர் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில் பல்வேறு நாடகக்கலைஞர்கள் நடித்த இந்நாடகம் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எற்படும் பிரச்னைகளை குறித்து ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசியிருந்தது.
 
நவீன இந்தியா, நிலவில் ஆராய்ச்சி என பல்வேறு விஷயங்களுக்காக மார்தட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில், கையால் மலம் அள்ளும் இழிநிலையை போக்க எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாதது வெட்கி தலைகுணிய வேண்டிய விஷயம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

அந்த சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன ஒடுக்குமுறைகள் என்ன அவர்கள் படும் வேதனைகள் என்ன என்பது குறித்து தத்ரூபமாக பதிவு செய்தது நாடகம். இந்த நாடகத்தில் சிறப்பு விருந்தினராக பல்வேறு ஆளுமைகள் கலந்துக்கொண்டனர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்துக்கொண்டார் நாடகத்தின் முடிவில் நாடகம் குறித்து பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்,
 
m2k8busg


“பொதுவாக இந்த நாடகம் எங்கு மேடை ஏற்றப்படுகிறது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கிராமங்களை நோக்கி, மக்களை நோக்கி நாம் கொண்டு போக வேண்டிய தேவை இருக்கிறது. இதை இங்கு பார்த்த அனைவருக்கும் இந்த நாடகம் குறித்து குறைந்தபட்சம் புரிதல் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற நாடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரிகிறதா என்கிற கேள்வி இருக்கிறது. இந்த நாடகத்தில் மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. ‘நாங்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிகிறோமா' என்கிற கேள்வி இருக்கு அந்த கேள்வியை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். உண்மையாகவே கண்ணுக்கு தெரியாத அல்லது கண்ணுக்கு தெரிந்தும் அதை புரிந்துக்கொள்ள முடியாத சமூகமாகதான் நாம் இருக்கிறோம். இந்த நாடகத்தை பொது சமூகத்திற்கு முன் நிகழ்த்தும் போதுதான் இன்னும் பல கேள்விகள் நமக்கும் எழும் என்று நான் நினைக்கிறேன்.
 
பொதுவாக மழை எவ்வளவு அழகானது  என்கிற சூழலில் அந்த மழை ஒரு சமூகத்திற்கு எவ்வளவு சிக்கலானது என்பதை இவ்வளவு அழகாக பேச முடியாது. அந்த அளவிற்கு இந்த கலை படைப்பு அரசியல் படைப்பாகவும் அறியாமையில் இருக்கின்ற மக்களிடம் பல கேள்விகளை எழுப்பக்கூடிய படைப்பாக  இருக்கிறது. இந்த நாடகத்தை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு போக வேண்டும். குறிப்பாக இந்த சமூக சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வேலையை இந்த நாடகம் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த சமூக மக்களிடம் இந்த நாடகத்தை கொண்டு போகும் போது இந்த வேலையை நாம் ஏன் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு அவர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
 
பொதுவாகவே பண்ணை அடிமை முறையில் இருந்துதான் நாம் வந்திருக்கிறோம். என்னுடைய வீடு கூட ஏதோ ஒரு ஆண்டை வீட்டுக்கு கீழ் இருந்து நாங்கள் வேலை செய்திருக்கலாம். ஒரு வெட்டியார் சமூகத்தில் இருந்துதான் நாங்களும் வந்திருக்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்னுடைய அப்பாவும், என்னுடைய பெரியப்பாவும் வெட்டியான் வேலை செய்ய முடியாது என மறுத்திருக்கிறார்கள். மறுத்ததற்கு பிறகு எங்கள் குடும்பம் வெட்டியான் வேலை செய்யவில்லை.
 
நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன், அரசியல் எழுச்சி அடைவதற்கு முன்பாக என்னடைய தாத்தா நாங்கள் ஊரில் வெட்டி வேலை செய்யமாட்டோம் என்று புறக்கணித்தார். மாணியத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தைக் கூட அவர் வாங்கவில்லை. அந்த முடிவு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முடிவை எடுப்பதற்கான தேவை நமக்கு இருக்கிறது. இந்த முடிவை எடுப்பதற்கு மிக முக்கியமான ஆளுமையாக புரட்சியாளர் அம்பேத்கர் நம் முன் இருக்கிறார். நம் விடுதலைக்கான ஒலியாக புரட்சியாளர் அம்பேத்கர் இருக்கிறார். அவரை வாசிப்பதன் மூலமாக இந்த பிரச்னையில் இருந்து நம்மால் வெளிவர முடியும் என்று நான் நினைக்கிறேன். எதிர்ப்பின் அடையாளமாக அவர் இருக்கிறார். அந்த ஒலியை ஏந்தி இந்த பிரச்னையில் இருந்து வெளியேறுவதற்கான தேவையை இந்த நாடகம் உருவாக்கும். இந்த நாடகம் குறிப்பாக கிராமங்களில் உள்ள பொதுசமூகத்திற்கு முன்பாக நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com