முகப்புகோலிவுட்

நீ இல்லாத இடமேது சுடர்மிகு வடிவேலா - இணையத்தை கலக்கும் மரணமாஸ் வடிவேலு வெர்சன்

  | December 05, 2018 17:03 IST
Petta Marana Mass

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான இசையில் வசூலை அள்ளிச்சென்றது என்னவோ நம் சுடர்மிகு வடிவேலு மட்டும்தான்.

ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டா என்று சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் வைரலாகி கொண்டே இருக்கின்றன. அரசியல்வாதிகள் என்ன பேசினாலும் அடுத்த சில மணி நேரத்தில் மீம்மாக போட்டு கலாய்த்து தள்ளி விடுகிறார்கள் நெட்டிசன்ஸ் .

இன்று சமூக வலைதளவாசிகளுக்கு விருந்தாக அமைந்தது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலின் வடிவேலு வெர்சன். வடிவேலு இல்லாத மீம்களே இல்லை என்று இருக்கும் நிலையில் எந்தவொரு புது படத்தின் பாடல் வெளியானாலும் சில மணி நேரங்களில் அந்தப் பாடலுக்கு வடிவேலு வெர்சன் உருவாகி விடுகிறது. தமிழ் மண்ணின் கலைஞனான வடிவேலுவின் உடல் மொழி அனைத்து சூழலுக்கும் குறிப்பாக அரசியல் பகடிக்கும், கேலி, கிண்டலுக்கும் இன்றும் அட்சர சுத்தமாய் பத்து பொருத்தத்துடன் பொருந்தி விடுகிறது.

‘பார்க்க தானே போற இந்த காளையோட ஆட்டத்தை' என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல். இசை தொடங்கியதும் தவசி பட வேலைக்காரன் வடிவேலுவின் அட்டகாச ஆட்டமும் தொடங்குகிறது.
‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் திறந்து வர்றான்' என்ற வரிகளுக்கு வடிவேலு கார்கதவையும் வீட்டின் கதவையும் திறந்து வருகிறார்.‘ஸ்லீவ் சுருட்டி வர்றான்' என்றது கைச்சட்டையை சுருட்டியபடி வருகிறார் வின்னர் பட கைப்புள்ள.

‘காலை இழுத்து உயர நினைச்சா' என்று வரிக்கு கைபுள்ள வடிவேலு காலைத் தூக்கி கதவில் உறங்கத் தொடங்குகிறார். ‘இடியாய் இடிக்கும்' என்ற வரியில் கைபுள்ளைக்கு எசகுபிசகாக அடிபடுகிறது. முரப்போடு நிற்பேன் என்பதற்கு முரப்புடன் போலீஸ் வடிவேலு வந்து நிற்கிறார். இப்படியாக பாடல் வரிக்கு ஏற்ற விதமாக மரண மாஸ் பாடலுக்கான வடிவேலு வெர்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடலில் கரகமாடும் வடிவேலும் கண்ணீர் சிந்தும் வடிவேலு, ஆட்டத்தை ரசிக்கு வடிவேலு என அனைத்துமாய் வருகிறார் வடிவேலு.

தமிழ் திரைப்பட எடிட்டர்கள் டீசர், ட்ரெயிலர் எடிட்டிக்கு நெட்டிசன்களை தேடி அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும். இந்த வடிவேலு வெர்சனில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நுணுக்கமாக எடிட் செய்திருக்கிறார்கள்.

மரண மாஸ் பாடலின் இறுதி வரிகளில் மற்றொருவன் வாசிக்கும் ஃபுளூட் இசைக்கு நடுத்தெருவில் ஆடி வசூல் அள்ளிச் செல்லும் அலெர்ட் ஆறுமுகத்தோடு பாடலும் முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான இசையில் வசூலை அள்ளிச்சென்றது என்னவோ நம் சுடர்மிகு வடிவேலு மட்டும்தான்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com