முகப்புகோலிவுட்

"மழையும் தமிழ் சினிமாவும் - சொல்லப்படாத காதல் கதை"

  | November 05, 2017 11:25 IST
Rain Songs

துனுக்குகள்

 • மழை - சினிமா உறவு தமிழ் சினிமாவில் கொண்டாடி தீர்க்கப்படவேண்டிய ஒன்று
 • பல உணர்வுகளுக்கு கருவியாக தமிழ் சினிமாவில் மழை பயன்படுத்தப்பட்டுள்ளது
 • மழைக்கு மனிதஉணர்வுகளை பிரதிபலிக்கும் சக்தி அதிகம்
எந்த ஒரு காட்சியும், பாடலும் இசையும் ஏதோ ஒரு உணர்ச்சியின் மேல் தான் கட்டமைக்கப்படுகிறது.

அது கோபமாகவோ, அழுகையாகவோ, சிரிப்பாகவோ, நெகிழ்வாகவோ துயரமாகவோ இருக்கலாம்.

ஆனால் எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அது நடக்கும் காட்சியில் மழை இணையும் போது அதன் உணர்ச்சிமையம் பல மடங்கு பெருகி ஒரு உச்சத்தில் நிற்பது மழைக்கே, மழைக்கு மட்டுமே உரித்தான ஒரு சிறப்பு.
வெயில், குளிர், இளவேனிற், இலையுதிர் என எத்தனை காலங்கள் இருந்தாலும் கார்காலத்திற்கு மட்டுமே திரைப்படங்கள், கவிதைகள், இசை என படைப்புலகத்துடன் ஒரு நெருங்கிய அந்தரங்க உறவை பேணும் வாய்ப்பு பல காலமாக வாய்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்த அந்தரங்க உறவை புரிந்தும் அறிந்தும் அதை தம் படைப்புகளில் சரியான இடத்தில் பயன்படுத்திய படைப்பாளிகளை கொண்டாடும் விதமாக முத்தாய்ப்பான சில காட்சிகளை காணப்போகிறோம்.

மின்னலே
 
minnale rain in tamil cinema

உணர்ச்சி: காதல்/மகிழ்வு

அந்த நேரத்தில், அந்த இடத்தில் மழை பெய்திருக்காவிட்டால் அப்பெண்ணை அவன் சந்தித்திருக்கவே முடியாது, அவள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆணை மணமுடித்து அவனுடனே வாழ்ந்திருப்பாள்.

சில உறவுகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம்பப்படுகிறது ஆனால் இங்கே இவர்கள் உறவை மழை நிச்சயித்திருக்கும்.

அப்படி ஒரு இடத்தில் தான் அவளை அவன் பார்க்கிறான், கொட்டும் மழையில் ஒதுங்கி ஒரு போன் பூத்தில் அவன் நண்பர்களிடம் பேச டயல் செய்து காத்திருக்கும் போது.

அம்மழையை ரசித்தவாறே அவள் குதித்தாடும் நடனத்தையும் மின்னல் ஒளியில் தெரியும் அவள் முகத்தையும், வானிலிருந்து இறங்கிய தேவதையை பார்ப்பது போல கண்ணகொட்டாமல் பார்க்கிறான் அவன். ஹாரிஸ் ஜெயராஜின் இசையை பற்றி பேசாமல் இதை நாம் கடக்கவே முடியாது. இடிக்கும் இடிகளுக்கு ஊடே வரும் புல்லாங்குழலை மறக்கவேமுடியாது.

கவுதம் வாசுதேவ் மேனன் தன் ஹோம் கிரௌண்டில் நின்று சிக்ஸ் அடித்து தன் வருகையை உலகிற்கு உணர்த்திய தருணம்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
 
alaipayuthey rain in tamil cinema

உணர்ச்சி: பிரிவின் துயரம்

சில நேரங்களில் சில மனிதர்கள் நமக்கு எத்தனை முக்கியம் என்றும் நம் வாழ்வில் அவர்கள் எத்தனை ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களின் பிரிவே உணர்த்தும் எனும் அடிப்படையில் அமைந்த இக்காட்சித்தொடர் மழையையும் காற்றையும் முறையே கார்த்திக்கின் தேடலையும் சக்தியின் கவலையையும் பிரதிபலிக்கும் குறியீடுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

மழையின் ஊடே அவளை தேடிய அவன் பயணமும் அவனில்லாது இருக்கும் அவள் வாழ்வின் வறட்சியும் ஒரு சேர காட்சிப்படுத்தும் இப்பாடலின் திரைமொழியே இதை காலம் கடந்து நிற்க வைக்கிறது.

ஜிகர்தண்டா
 
jigarthanda rain in tamil cinema

உணர்ச்சி: பயம் கலந்த அதிர்ச்சி

உண்மைக்கு அருகாமையில் படம் எடுக்கும் ஆர்வத்தில் இருக்கும் கார்த்திக் சேதுவின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்க அவன் அடியாள் அலைபேசியை ஓட்டுக்கேட்கிறான்.

கொட்டும் மழைக்கு நடுவே இரு ரவுடி கூட்டத்திற்கு நடுவே நடக்கும் அதிர வைக்கும் மோதல்களையும் கொலைகளையும் ஓட்டுக்கேட்டு கொண்டிருக்கும் கார்த்திக் அது அனைத்தும் தன்னை நோக்கி திரும்பும் என கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டான்.

கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தன்னிடம் திரும்புவதை கண்டு ஓட முயற்சிக்கும் போது சேதுவின் மொத்த கூட்டமும் தனக்கு முன் நிற்பதை காண்கிறான் கார்த்திக்.

தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு மழையை சரியாக பயன்படுத்தி ஒரு காட்சியை உணர்ச்சிமையத்தின் உச்சியில் சென்று சேர்த்த படைப்பாளிகள் வெகு சிலரே.

ரசிகர்களை சீட்டின் நுனியில் கொண்டு வந்து கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து பெருமையில் மழைக்கு ஒரு பெரிய பங்குண்டு

தளபதி
 
thalapathy rajinikanth rain in tamil cinema

உணர்ச்சி: ஏக்கம்/கோபம்/ ரௌத்திரம்

ஒரு ஊரே கூடி நிற்க, அரசாங்க அதிகாரிகள் புடை சூழ, தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கின்றனர்,தண்ணீர் வந்த சந்தோஷத்தில் அந்த ஊரே மிதந்துகொண்டிருக்க ஒரு பெண்மணி அதற்கு காரணமான மாவட்ட ஆட்சியரின் தாயிடம் "ஒன்றுக்கு இரண்டு பிள்ளையாக பெற்றிருக்கலாமே தாயே", என எதார்த்தமாக கேட்கிறார், அந்த தாய்க்கு தன் தொலைந்து போன மகனின் ஞாபகம் வருகிறது, ஆழ்துளை கிணறினால் வரும் அந்த தண்ணீர் மழை போல அங்கே சிதறி அனைவரையும் நனைத்துக்கொண்டிருக்கிறது...

இசைக்கோர்ப்பு மாறுகிறது, வேறொரு இடம்.

கொட்டும் மழை அனைவரையும் நனைத்துக்கொண்டிருக்க இன்னொரு மகனின் அறிமுகம். ஒருவன் அங்கே ஒரு ஊரை காப்பற்றிக்கொண்டிருக்க இங்கே இன்னொருவன் ஒருவனை கொல்கிறான்(அவனை கொன்றதே பிறரை காப்பாற்ற தான் என்பதை பின்னே அறிகிறோம்) இருவரின் அறிமுகத்திலும் மழை ஒரு முக்கியமான கருவியாக குறியீடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இருபுறமும் நனைகிறார்கள், ஓரிடத்தில் மகிழ்ச்சி, இன்னொரு இடத்தில் பயம், இம்முரணை இணைக்கும் கருவியே இங்கு மழை தான்.

இந்தியன் படத்தில் சேனாபதியின் மகளை காப்பாற்றும் போராட்டமாக இருக்கட்டும், நண்பன் படத்தில் மழையினால் துண்டிக்கப்பட்ட கல்லூரியில் நடக்கும் குழந்தையின் பிறப்பாக இருக்கட்டும், மழையின் மூலம் அங்கு கடத்தப்பட்டிருக்கும் உணர்ச்சி நம்மை இருக்கையில் கட்டிப்போட்டிருக்கும்

பல படைப்பாளிகள் தங்கள் கற்பனை வறட்சியை சமன் செய்ய மழையை உபயோகித்து தப்பித்துக்கொள்வதாக இருக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை விஞ்சும் வண்ணம் அந்த மழையே மகிழ்வுரும் அளவிற்கு சரியான இடங்களில் சரியான நேரங்களில் அதை பயன்படுத்தி பெருமை சேர்த்திருக்கிறோம் என்பதை மறுக்கவே முடியாது.

ஜானி, இருவர், காதலும் கடந்து போகும் போன்ற, ஈரம் படங்களே அதன் வாழும் சாட்சியம்.

மழை-சினிமா உறவு தமிழ் சினிமாவில் கொண்டாடி தீர்க்கப்படவேண்டிய உறவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இதை படிப்பதோடு நிறுத்தாமல் இக்காட்சிகளை தேடி அதனை பார்ப்பது இந்த மழை காலத்தில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய வரம், நினைவுகளின் அசைபோடல்.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com