முகப்புகோலிவுட்

தெற்கிலிருந்து தோன்றிய தென்றல் ஸ்ரீதேவி!

  | August 14, 2019 11:06 IST
Sridevi

துனுக்குகள்

 • ஸ்ரீதேவியின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்
 • பலரும் ஸ்ரீதேவியின் நினைவுகளை பகிர்ந்து வகிறார்கள்
 • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி இறந்தார்
Sridevi birthday anniversary: தென் தமிழகத்தில் பிறந்து இந்தியா முழுவதும் தென்றலாய் வீசிய காற்று ஸ்ரீதேவி (Sridevi). இந்திய திரையுலகில் ஒரு பெரும் சாம்ராஜ்யம் அமைத்த தெற்கிலிருந்து தோன்றிய இந்த தென்றல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. மக்கள் நேசிக்கும் கலைஞர்களுக்கு மரணம் கிடையாது என்பார்கள் அது உண்மைதான், ஸ்ரீ தேவி என்னும் கலைஞர் இன்னும் பலகோடி மனிதர்களின் புலம்பல்களால் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்று அந்த தென்றலுக்கு பிறந்த நாள்.
 
எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்திப்போவார் ஸ்ரீதேவி (Sridevi). ஆண்களின் கனவு கன்னி, ஸ்ரீதேவி நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு ஒரு பெரும் கூட்டம் திரையரங்குகளை நோக்கி நகரும். அந்த அளவிற்கு தனது சாம்ராஜ்யத்தை ரசிகர்களைக்கொண்டு கட்டமைத்தார். எப்படி பார்த்தாலும் நம் பக்கத்து வீட்டு பெண் போலவே இருப்பார், அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் நாம் எங்கோ பார்த்தது போல இருக்கலாம், நம்மோடு தொடர்புடைய ஒரு கதாபாத்திரமாக இருக்கலாம். அந்த அளவிற்கு வசீகரிக்கும் வல்லமையும் குழந்தை முகமும் கொண்டவர்.
 
அமெரிக்க வீதிகளில் அப்பாவியாக அலைந்து திரிந்த ‘இங்கிலிஷ் விங்கிலிஸ்' படத்தின் நாயகி சசியாக இருந்தாலும், ‘பதினாறு வயதினிலே' சப்பானியின் மயிலாக இருந்தாலும் சரி, ‘விஜி'யாக இருந்தாலும் சரி பெண்களின்  நனவிலியாகவே இருந்திருக்கிறார்.
 
ஸ்ரீதேவிக்கு (Sridevi) தான் ஒரு நடிகையாகவேண்டும் என்கிற கனவு இருந்ததோ இல்லையோ ஆனால் அவர் தாயாருக்கு இருந்தது. அந்த ஆசையில் வளர்க்கப்பட்ட அழகிய வடிவம்தான் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழில் குல விளக்கு, கனிமுத்துப் பாப்பா, ஆதி பராசக்தி, அகத்தியர், பெண் தெய்வம், பாபு, வசந்த மாளிகை, பாரத விலாஸ், தெய்வக் குழந்தைகள், திருமாங்கல்யம், திருடி என தொடர்ச்சியாகப் படங்கள் மூன்று மொழிகளிலும் வெளி வந்தன.
 
நான்கு வயதில் தொடங்கிய ஸ்ரீதேவியின் திரைப்பயணம், கே.பாலசந்தர் மூலமாக 13 வயதில்   “மூன்று முடிச்சு” படத்தில் நாயகியாக அறிமுகமாகி வெற்றி கண்டார். இந்த படத்தை அடுத்து ஸ்ரீதேவியின் திரைப்பயணத்தில் ஆகப்பெரும் திருப்புமுணையாக அமைந்த படம் ‘மயிலு' கதாபாத்திரத்தில் நடித்த ‘பதினாறு வயதினிலே” . இதற்கு முன்பும் பல படங்களில் நடித்திருந்தாலும் எல்லோருடைய மனதிலும் மயிலு மழையென நிரம்பிவிட்டாள். இதன் பிறகு இவர் கதாநாயகர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ், அம்பரீஷ், முரளி மோகன் என அனைவருடனும் நடித்தபோதும் கமல், ரஜினியுடன் அவர் நடித்த படங்களில் தனித்துத் தெரிந்தார். குறிப்பாக, கல்யாணராமன், குரு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, ஜானி, தர்மயுத்தம், அடுத்த வாரிசு போன்ற படங்கள் உச்சம் தொட்டவை. தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்தவர் ஸ்ரீதேவி.
 
1983ல் வெளிவந்த ‘ஹிம்மத்வாலா' சூப்பர் ஹிட் ஆனது. அறிமுகப்படம் தோல்வியானால் அடுத்தடுத்து படங்கள் அமைவதே கேள்விக்குறி என்ற நிலையில் சென்ட்டிமென்ட் தடைகளை எல்லாம் தாண்டிக் அசைக்க முடியாத இடத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டார். 'சத்மா', தோஃபா, நயா கதம், மஃக்சட், மாஸ்டர்ஜி, நஸ்ரானா, மிஸ்டர் இந்தியா, வஃக்த் கி ஆவாஸ், சாந்தினி, ஹீர் அவுர் ராஞ்சா, என தமிழ் படங்களை காட்டிலும் இந்தியில் ஆழமாக வேறூன்றத் தொடங்கினார். தமிழ், தொலுங்கு, இந்தியில் சூப்பர் ஸ்டார் பட்டம் என இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை வீசிய புயல் கடந்த ஆண்டு ஓய்ந்தது. ஆனால் இன்னும் தென்றலாய் நம்மை தழுவிக்கொண்டே இருக்கிறது. வளர்ந்த குழந்தை ஸ்ரீதேவிக்கு (HBDSridevi) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com