முகப்புகோலிவுட்

பெண்களை விரட்டி விரட்டி காதலிக்கவும், சபிக்கவும் கற்றுக்கொடுக்கிறதா தமிழ் சினிமா? #StalkingInTamilCinema

  | March 10, 2018 14:43 IST
Stalking In Tamil Cinema

துனுக்குகள்

  • Stalkingகை தொடர்ந்து தமிழ் சினிமா கற்பிப்பது ஏன்?
  • பார் பாடலில் பெண்களை திட்டுவது ஏன்?
  • பெண்களுக்கு எதிரான மனோபாவத்தை ஏன் விதைக்கிறது?
கல்லூரி மாணவி அஸ்வினியின் கொலை சம்பவம், நம் அனைவரையுமே பதற வைத்திருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனை சம்பவங்களை இதைப் போல பார்க்கவிருக்கிறோமோ என்கிற கேள்வி பெரும் கவலையை தருகிறது. படிக்கும் வயதில் ஏற்பட்ட தவறான இனக்கவர்ச்சியை காதல் என நினைத்து, பின்னர் தான் தேர்வு செய்த நபர் நல்லவன் இல்லை என தெரிந்து காதலை மறந்து தனது படிப்பைத் தொடர நினைத்தபோது அஸ்வினிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘அந்த பையன் மேல தான் தப்பு’, ‘அது எப்படி, அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணாமலா இருந்திருப்பா?’ என இங்கே ஆயிரம் விவாதங்களுக்கிடையிலே, தான் காதலித்த பெண்ணை குத்தி கொலை செய்யும் எண்ணம் எப்படி ஒருவனுக்கு வருகிறது என்கிற கேள்விக்கு பதில் தேட முயற்சித்து தோற்கிறேன். ‘அவ எனக்குத்தான், என்னை எப்படி அவ வேணாம்ன்னு சொல்லலாம்... சாவட்டும்’ என கொலை செய்த அந்த இளைஞனின் எண்ண ஓட்டம் எப்படி இருந்திருக்க வேண்டும்? இது எல்லாமே, வீட்டில் குழந்தை வளர்ப்பிலேயே தொடங்குகிறது அல்லவா? ‘நான் ஒரு ஆம்பள, என்னை எப்படி அவ பிடிக்கலன்னு சொல்லலாம்?’ என ஒரு பெண்ணின் நிராகரிப்பை கூட ஏற்றுக்கொள்ள முடியாத பக்குவமின்மையும், ஒரு பெண் எப்படி தன்னை வேண்டாமென சொல்ல முடியும் என்கிற ஆணாதிக்க சிந்தனையும் வீட்டில் தொடங்கும் வளர்ப்பு பிரச்சினை தானே?
 
stalking kollywood

ஒரு பெண் எப்படி உடை அணிய வேண்டும்? வேலைக்கு போகலாமா, வேண்டாமா? என்ன மாதிரியான வேலைக்கு மட்டும் போகலாம்? என்ன சமைக்க வேண்டும்? யாருடன் பேசலாம்? எந்தளவு பேசலாம்? எப்பொழுது சிரிக்கலாம், கூடாது என்கிற ஆண்களின் வரையறை, கோட்பாடுகள் ஒருபுறமிருக்க... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்குமே எத்தனை எத்தனை பாகுபாடுகள் இங்கே. படிக்க வைப்பதில் தொடங்கி, காதல் விவகாரத்தில் ரியாக்ட் செய்வது வரை ஒரு ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் எவ்வளவு ஓரவஞ்சனை?

அஸ்வினியின் கொலை மட்டுமல்ல, இது போன்ற ஒவ்வொரு சம்பவத்திலுமே தமிழ் சினிமாவிற்கும் பெரும்பங்கு உள்ளது என்று சொன்னால், அது மிகையாகாது. ஆண்டாண்டு காலமாய், திரைப்படங்களில் stalking (ஒரு பெண்ணின் சம்மதமின்றி, அவளை பின் தொடர்வது) என்கிற ஒரு விஷயம் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. நாயகி விருப்பம் இல்லை என சொன்னாலும், ஹீரோ துரத்தி துரத்தி காதலிப்பதே நம் சினிமாக்களின் மாறா மரபு.
 
stalking kollywood

‘மன்னன்’, ‘மாப்பிள்ளை’, ‘திமிரு’, ‘வல்லவன்’, ‘படையப்பா’ போன்ற பல படங்களில் ‘பொம்பள பொம்பளையா இருக்கணும்.. அடக்க ஒடுக்கமா இருக்கணும்’ எனவும், ‘சிவகாசி’ போன்ற படங்களில் ‘இது டாப் இல்ல, ப்ரா.. இது ஷார்ட்ஸ் இல்ல, ஜட்டி’ எனவும் பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் எப்படியெல்லாம் உடை அணியவேண்டும் என்றெல்லாம் பாடம் எடுத்தது ஒரு புறம் இருக்க, தன் காதலை ஏற்றுக்கொள்ளும் வரை ஒரு பெண்ணை எவ்வளவு வேண்டுமானாலும் டார்ச்சர் செய்யலாம் என்றும் நம் சினிமாக்கள் கற்று கொடுத்திருக்கின்றன. பிடிக்கவில்லை என சொன்ன பெண்ணை விரட்டி விரட்டி எப்படி சம்மதிக்க வைப்பது என்பதையே ‘திருவிளையாடல்’, ‘தேவதையை கண்டேன்’, ‘படிக்காதவன்’ போன்ற படங்களில் நடிகர் தனுஷும், பெண்கள் காதலில் நேர்மையாக இருப்பதில்லை என்கிற பிம்பத்தை உருவாக்குவதையே ‘மன்மதன்’ ‘வல்லவன்’ ‘AAA’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் நடிகர் சிம்புவும் செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
 
stalking kollywood

சமீபத்தில் நடந்த இந்த கொலை குற்றங்களுள் சில, சினிமாக்களை பிரதிபலிப்பதைப் போலவே உள்ளது. சினிமாவில் தனக்கு பிடித்த ஹீரோவுக்கு கிடைத்ததைப் போலவே, வேலையில்லாமல் ஊர் சுற்றி திரிந்தாலும் கூட தனக்கு பிடித்த பெண் தன்னை விரும்பியே தீருவாள் என நம்பும் இந்த சிலர், தங்கள் காதலை அவள் மீது வலிந்து திணிக்கவும் செய்கிறார்கள். ‘எனக்கு உன்னை பிடிக்கவில்லை’ என அவள் சொல்லியும், அவள் பின்னாலேயே இவர்கள் சுற்றுவது என்றாவது ஒரு நாள் ‘YES’ சொல்லித்தானே ஆகவேண்டும் என்கிற நினைப்பில் மட்டுமே (எந்த தமிழ் திரைப்படத்தில், ஹீரோயின் தன்னை பின் தொடரும் ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள்? ஆரம்பத்தில் எத்தனை NO சொன்னாலும், இறுதியில் காதலை ஒத்துக்கொள்ளாமல் இருந்ததே இல்லை – ஹீரோ எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலுமே). ஆனால், நிஜம் அதுவல்லவே! அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் எடுக்கும் விபரீத முடிவே இவை. பெரும்பாலான சமயங்களில், அப்படி ஒருவன் தன்னை பின்தொடர்ந்ததே கூட தெரியாமல் போகிறது சில பெண்களுக்கு. ‘பொண்ணுங்களை நம்பாத... காதல் போனா, வாழ்க்கையே போச்சு’ என்பது போன்ற கருத்தை முன்வைக்கும் சில கமர்ஷியல் குப்பைகளைப் பார்த்து, தனது வாழ்க்கையை அவள் சீரழித்துவிட்டாள் அவளை பழிவாங்க வேண்டும் என தோன்றும் தவறான எண்ணமே, கொலை வரை சென்று முடிகிறது.
 
stalking kollywood

அடிப்படடையில், இங்கே பல இளைஞர்களுக்கு காதலுக்கும் Stalkingகிற்குமே வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் (அல்லது காதலிப்பாள்) என இவர்களாக நினைத்துக்கொண்டு, அவள் பின்னால் சுற்றி அவளை தொல்லை செய்து, பின்னர் அந்த பெண் இவனை பிடிக்கவில்லை என சொன்னதும் ‘காதல் தோல்வி’ என சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இது காதலே இல்லாதபொழுது, இது எப்படி ‘காதல் தோல்வி’ ஆகும்? அந்த பெண்ணும் இவனை நேசித்திருந்தால் தானே, அது காதல்? இவன் மட்டும் அவளை ஒருதலையாக காதலித்து அவள் பின்னாலேயே சுற்றி தொல்லை கொடுப்பது தான் காதலா என்ன?
 
stalking kollywood

பெண்களைத் திட்டியும், பெண்கள் என்றாலே ஆண்களை ஏமாற்றுபவர்கள் என்பது போலவும் வசனங்கள் பேசியும் பாடல்கள் பாடுவதன் மூலமும் எளிதாக இளைஞர்களிடம் கைத்தட்டல் வாங்க முடிகிறது என்பதை புரிந்துகொண்ட சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற சில இளம் ஹீரோக்கள், தொடர்ந்து தங்கள் படங்களில் இவற்றை இடம்பெற செய்தது சகிக்க முடியாத கொடுமை. ‘Virgin பசங்க’ என்கிற வார்த்தையை டிரெண்ட் ஆக்கியதும், ‘நல்ல பொண்ணுங்க எல்லாம், டைனோசர் காலத்துலயே மறைஞ்சுட்டாங்க’ என்பது போன்ற வசனங்களையும் தொடர்ந்து பேசி வரும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் இந்த பட்டியலில் முக்கிய இடம் உண்டு. இப்படிப்பட்ட திரைப்படங்களில் ஆகக் கொடுமையான விஷயம் எதுவென்றால், இத்திரைப்படங்களில் வரும் படு கேவலமான ‘டாஸ்மாக்’ பாடல்களே! ஹீரோயின் மீது எந்த தப்புமே இல்லாவிடினும் கூட, குடித்துவிட்டு அவளையும் (ஒட்டுமொத்தமாக எல்லா பெண்களையுமே) திட்டும் இப்படிப்பட்ட பாடல்கள்தான் பெரும்பான்மை இளைஞர்களின் விருப்பப் பாடல்களாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தான், இந்த ‘டாஸ்மாக் பாடல்’ டிரெண்ட் மிக பிரபலமாகி வருகிறது. ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா’ ‘அடிடா அவளை, உதைடா அவளை’ ‘ஒய் திஸ் கொலவெறி’ ‘டாவுயா.. ஓவியா.. No, வேணாம்யா’ ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ போன்ற பாடல்களின் வெற்றியும், இப்பாடல்கள் எல்லா தரப்பினரையும் வெகு எளிதில் சென்றடைவதும் எந்த விதத்தில் நன்மை பயக்கும் என நினைக்கிறீர்கள்? இது எல்லாம் கூட பரவாயில்லை. ‘பீப் சாங்’ என்கிற பெயரில் ‘பொண்ணுங்களை திட்டாதே, மாமா... அவளை வேணா ஓ**க்கோ, மாமா’ என நேரடியாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டதும், ‘அது சும்மா ஜாலிக்காக பண்ண பாட்டு, யாரோ லீக் பண்ணிட்டாங்க’ என சொன்னதும் எவ்வளவு பெரிய அசிங்கம்? அதையும் அந்த நடிகரின் ரசிகர்கள் ஆதரித்ததே, முட்டாள்தனத்தின் உச்சம்!
 
stalking kollywood

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களிலும், நல்ல கதையம்சமுள்ள காதல் திரைப்படங்களிலும் கூட Stalking இருந்திருக்கிறது. தங்கள் படங்களில் பெண்களை மிக கௌரவமாக சித்தரிக்கும் மணிரத்னம், கௌதம் மேனன் அவர்களின் படங்களான ‘அலைபாயுதே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்களில் கூட Stalking உண்டு. ஆனால், அப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் தெளிவானவளாகவும் புத்திசாலியாகவும் காட்டப்பட்டிருப்பதால் அது அவ்வளவு உறுத்தலாக தெரியவில்லை. அதுவே, ‘ரெமோ’ ‘படிக்காதவன்’ போன்ற பெரும்பான்மை திரைப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் வழக்கமான தமிழ் சினிமா ‘அரை லூசு’ நாயகியாக இருப்பதே பிரச்சினை.
 
stalking kollywood

Stalking தவறில்லை என்பதில்லை போலவும், ஒரு பெண்ணை தொடர்ந்து தொல்லை செய்தால் அவள் எப்படியும் ஒரு நாள் சம்மதித்தே தீருவாள் என்றும் நம் சினிமாக்கள் தொடர்ந்து சொல்லுமாயின், அதுவே நம் இளைஞர்களின் எண்ணமாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளை பின் தொடர்வதே (Stalking) தண்டனைக்குரிய குற்றம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதியவைக்க வேண்டிய அவசியம் இங்கிருக்கிறது. அடுத்த முறை, நம் தமிழ் சினிமா ஹீரோ இப்படி செய்கையில், காவல் நிலையத்தில் பிரம்படி வாங்கும் காட்சிகள் இருக்க வேண்டியதும், ‘அந்த பொண்ணைப் பத்தி எல்லா டீடெயில்ஸும் எடுத்துட்டேன், வா அவளை ஃபாலோ பண்ணலாம்’ என சொல்லும் நண்பன் கதாபாத்திரம் சிறையில் அடைபட்டிருக்கும் காட்சிகள் இருக்க வேண்டியதும் கட்டாயம்!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்