முகப்புகோலிவுட்

ரஜினியெனும் சுருதிபேதம் - ரஜினி பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

  | December 12, 2017 12:55 IST
Superstar Rajinikanth Birthday

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தைவிட அதிகமாக கொண்டாடும் தகுதியை உடையவர் ரஜினி
  • விரல்விட்டு எண்ணும் அளவிற்குதான் அவருடைய திறமை பயன்படுத்தப்பட்டிருக்கிறது
  • அன்றிலிருந்து இன்றுவரை தப்பாத தப்புத்தாளமாக மிளிரும் ஒரே நடிகர் இவர்தான்
இசையில் கிரகபேதம், இசைபேதம், இசைகேடு, சுருதி பேதம், நாராசம், சாதிபேதம், சமயபேதம் என்று பல மாடங்கள் இருக்கின்றன. சீரான இசை அளவிலிருந்து பிறழ்ந்து ஒலிக்கும் ஒலிக்கு சுருதி பேதம் என்று பெயர். நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான "அபூர்வ ராகங்கள்" படத்தில் "பைரவி வீடு இதானே" என்ற கேள்வியோடு ரஜினிகாந்த் கதவைத்திறந்து அடியெடுத்து வைக்கும்பொழுது திரையில் "சுருதி பேதம்" என்று வரும். தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கான முகவெட்டு எதுவுமில்லாமல் மெலிந்த தேகம், கோரை முடி என சினிமாவின் சுருதி பேதமாக அறிமுகமானார் ரஜினி. அன்றிலிருந்து இன்று வரை தாளம் தப்பாத தப்புத்தாளங்களாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி என்பவர் யார் ? நடிகரா இல்லை சூப்பர் ஸ்டார் எனும் ஸ்டைல் brand ஆ? ரஜினி சிகரெட்டை தூக்கிப்போட்டு சூப்பர் ஸ்டார் ஆகிவிடவில்லை. அது மட்டும் தான் ரஜினி என்று நினைப்பவர்களுக்கு ரஜினி எனும் நடிகன் நிச்சயம் தெரிய மாட்டார். ரஜினியை இன்றளவும் நடிகரென்று ஏற்றுக்கொள்ளாமல் ஒதுங்கிச்செல்லும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். காரணம் நடிப்பிற்கு இங்கு வகுக்கப்பட்ட இலக்கணம். நடிப்பென்பது சூழ்நிலைக்கு ஒவ்வாத உணர்வை வெளிப்படுத்துவது. அதுவாகவே வெளிபட்டால் அது இயற்கை. இயற்கையாக தனக்கு வந்த வழியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ரஜினிக்கு அவர் பேசிய "என் வழி தனிவழி" வசனம் சாலப் பொருத்தம். கமல்ஹாசனை மேடையில் வைத்துக்கொண்டே "நான் தொட்டத அவர் செஞ்சார் அவர் தொட்டத நான் செய்யல. நான் என் வழிய மாத்திக்கிட்டேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். அவர் போட்ட வழியில் அந்த சூப்பர் ஸ்டார் மோகத்திற்காக பயணிக்கும் நடிகர்கள் ஏராளம்.

ஸ்டைல் செய்வதில் மட்டுமில்லாமல் காதல் காட்சிகள், நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரம் என்று அனைத்திலுமே முத்திரை பதித்தவர் ரஜினி. சூப்பர் ஸ்டாரை விட நடிகர் ரஜினி அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர். ஏனோ இந்த சூப்பர் ஸ்டார் மகுடம் நடிகரை சற்றுத் தள்ளியே வைத்திருக்கிறது. இன்று ரஜினி தூக்கிச்சுமக்கும் இந்த சூப்பர் ஸ்டார் அடையாளம் அவரது உண்மையான முகம் அல்ல. நிதர்சனமாக பார்த்தால் இந்த ஸ்டார் அடையாளம் பிழைப்புக்காக அவரே ஏற்றுக்கொண்டது. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தனக்கு கைவந்த கலையை அவர் திரையில் செய்தார். அதை வைத்து பணம் பார்த்தது தமிழ் சினிமா. பணம் பார்த்த அவரின் படம் பார்த்த ரசிகனும் அதிகம் விரும்பியது ஸ்டாரைத்தான். அதனால் தான் நடிகன் வெளியில் வந்தால் சூப்பர் ஸ்டாரை ரசிப்பவர்கள் முகத்தை சுழித்துக்கொள்வார்கள். இருந்தாலும் பாலசந்தர், மகேந்திரன், மணிரத்னம், ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் அவரிடம் இருந்த நடிகனை மட்டும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள். புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், நெற்றிக்கண், எங்கேயோ கேட்ட குரல், ஜானி, கை கொடுக்கும் கை, தில்லு முள்ளு என்று எத்தனையோ படங்கள் இருக்கின்றன ரஜினியை நடிகனாக காட்டிய படங்கள்.
"எம்மகன் கற்பூரம் மாதிரி. யார் ஏத்தினாலும் ஒரே ஜோதி" என்று படையப்பா படத்தில் ரஜினிக்காக லட்சுமி சொல்லும் வசனம் இருக்கும். ரஜினி அப்படியொரு கற்பூரம். எந்த இயக்குநர் அவரை வைத்து படமெடுத்தாலும் மசாலாவாக இருந்தாலும் யதார்த்தமாக இருந்தாலும் அவரது தொழில் நேர்மை அவரை வெற்றியடையச்செய்தது. ரஜினி இயக்குநர்களின் நடிகர். ஒரு நடிகன் ஸ்டாராக இருக்கலாம். ஸ்டாராக வர ஆசைப்படுபவர்கள் குறைந்தபட்சம் நடிக்கவாது செய்ய வேண்டும். ரஜினி தனது சாரட்டு வண்டியில் இரண்டையும் பூட்டி தனது பயணத்தை செய்து வருகிறார். இது மிகவும் கடினமான ஒன்று. 'எங்கேயோ கேட்ட குரல்' வந்த அதே ஆண்டு 'மூன்று முகம்' படமும் வெளியானது. ராபின்ஹூடாக "நான் சிகப்பு மனிதன்" படத்தில் நடித்த அதே ஆண்டு ராகவேந்திரராக "ஸ்ரீ ராகவேந்திரர்" படத்தில் நடித்தார்.

இன்றைய இளம்நடிகர்கள் வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு முற்படுவதில்லை. ஆனால், ரஜினியோ "ஆறிலிருந்து அறுபது வரை", "நெற்றிக்கண்", "எங்கேயோ கேட்ட குரல்", "நல்லவனுக்கு நல்லவன்", "அண்ணாமலை", "படையப்பா" என்று சீரான இடைவெளியில் வயதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன் நீட்சி தான் சமீபத்திய கபாலி. எப்படி இருந்தாலும் வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் செய்வதில்லை என்ற விமர்சனங்களை புன்னகையோடு எதிர்கொண்டு வந்திருக்கிறார்.

ரஜினி தன்னை சூப்பர் ஸ்டாராகவும் நடிகனாகவும் பல இடத்தில் ஒரேவிதமாக வெளிக்காட்டியுள்ளார். ஒரு சோற்றுப்பதம் 'தளபதி'. இன்றும் சினிமா ரசிகன் கொண்டாடும் தளபதியில் வந்த சூர்யா நடிகனா சூப்பர் ஸ்டாரா என்று கேட்டால் Sarcasticஆக ரஜினி 'நடித்த' படங்களில் ஒன்று "தளபதி" என்று சொல்வார்கள். முழங்கைக்கு மேலே மடித்து விடப்பட்ட சட்டை, காற்றில் பறக்கும் முடி, கழுத்தில் கருப்புக்கயிறு என படம் முழுக்க ஒரே linear dimension. ரஜினி தன்னுடைய சூப்பர் ஸ்டார் இமேஜ் இல்லாமல் சூர்யாவாக நடித்திருந்தாலும் அவருக்கே இருக்க உரிய mass/class elements நிறைய இடத்தில் காண முடியும். ராக்கம்மா கையத்தட்டு பாடலில் அவருடைய துள்ளல், அந்த பாடலில் ஷோபனாவை பார்க்கும் அமைதி கலந்த பார்வை, மழையில் வரும் அறிமுகக்காட்சி, போலீஸ் ஸ்டேஷன் interrogation sceneல் "தெரியாது டா" என்று சொல்வது, கலக்டர் அலுவலக காட்சி என்று இப்படி நிறைய. இதெல்லாம் ஒரே சீரில் சூப்பர் ஸ்டாராக வாழும் காட்சிகள். முழு சூப்பர் ஸ்டாராகவும் கதாபாத்திரமாகவும் மாறும் காட்சி மம்மூட்டியை மருத்துவமனையில் சேர்க்கும் காட்சி. சாகக்கிடக்கும் மம்மூட்டியை ஸ்ட்ரெச்சர்ல் வைத்துத் தள்ளிக்கொண்டே "தேவா சாகாத, முழிச்சுக்கோ, முழிச்சுக்கோ" என்று கத்திகொண்டே வருவார் சூர்யா. அந்த ஸ்ட்ரெச்சர் அப்டியே operation theatreக்குள் போகும். அந்த அவசரத்தில் ஸ்ட்ரெச்சர் கூடவே சூர்யாவும் உள்ளே செல்லும்போது ஒரு ward boy வந்து "அங்கெல்லாம் உள்ள போகக்கூடாது"னு சூர்யாவை பின்னாடி இருந்து தடுப்பார். அப்போது சூர்யா சூப்பர் ஸ்டாராக மாறுவார். அப்பொழுது திரும்பி பார்க்கும் பார்வை. இரண்டு நொடிகள் நீளும் கட்சியில் தனது வழக்கமான கோபப்பார்வையில் அழகான transition காட்டியிருப்பார் ரஜினி. அந்த காட்சிக்குப் பிறகு, டாக்டரிடம் "தேவராஜ் பொழச்சுடுவான்ல" என்று கேட்டு, "கஷ்டம். பதினாலு இடத்துல குத்திருக்காங்க" என்று சொல்லும்டாக்டரை ஆற்றாமையில் தள்ளும்போது வரும் ஸ்டார் ரஜினி சட்டென அடுத்த நொடியில் "பொழைக்கணும்" என்று உடைந்த குரலில் சொல்லும்போது சூர்யாவாக மாறுவார். இது தான் ரஜினி. ஒரு காட்சியில் வெவ்வேறு பரிமாணங்கள், உடல்மொழி.

"ஆறிலிருந்து அறுபது வரை" படத்தில் தங்கைக்கு பரிசுப்பொருட்கள் வாங்கிச்சென்றுவிட்டு அவரது ஊதாசீனங்களை கேட்டு உடைந்து விழும் காட்சி, "தில்லு முள்ளு" படத்தில் "வடகோடி தண்டியில காந்தி உப்பு சத்தியாகிரகம்னு சொன்ன உடனே தென்கோடி தூத்துக்குடி ஒரு சட்டிய தூக்கிட்டு சமுத்திரத்த நோக்கி நடந்தாரே ஒரு மகான் அவரப்பத்தி கேள்வி பட்ருக்கீங்களா" என்று கேட்டு அதற்கு தேங்காய் சீனிவாசன் இல்லை என்று சொன்னதும் "அப்ப அவர் தான் சார் எங்க அப்பா" என்று சொல்லும் காட்சி, "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் செந்தாமரையிடம் ஊரைக்காலி செய்ய வினுச்சக்ரவர்த்தி கேட்டுக்கொண்டிருக்க பின்னாடி தரையில் அமர்ந்துகொண்டு ரஜினி செய்யும் சேஷ்டைகள், "முள்ளும் மலரும்" படத்தில் சரத்பாபுவை சந்திக்க காத்திருக்கும் ரஜினியை "யோவ் பெரிய மனுஷா போயா" என்று ஏளனம் செய்பவனை தோளில் சிரித்துக்கொண்டே தட்டிக்கொடுத்து "நல்லாயிரு" என்று சொல்லும் காட்சி என சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே அவர் காட்டிய பாவனைகள் பொக்கிஷங்கள்.

கண்ணீருடன் நம்பிக்கையோடு "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனா கூட இந்த காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார். கெட்டப் பையன் சார் அவன்" என்று சொல்லும் காளியை மறந்து விட முடியுமா என்ன.
ரஜினிக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக்கொள்ள அறிவுரை வழங்குகிறார்கள். 'ஆறிலிருந்து அறுபது வரை' சந்தானம், 'முள்ளும் மலரும்' காளி, 'தில்லு முள்ளு 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், 'நெற்றிக்கண்' சக்கரவர்த்தி போன்றவர்களுக்கெல்லாம் வயது என்பது ஏது ?

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த்

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்