முகப்புகோலிவுட்

சமூக அவலங்களை உரக்க பேசும் “very very bad” பாடல்- சிறையில் இயக்குநர் ராஜுமுருகன்

  | January 22, 2019 21:04 IST
Jiiva

துனுக்குகள்

  • ஜிப்ஸி திரைப்படத்தை இயக்குநர் ராஜு\முருகன் இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்
  • யுகபாரதி பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் நட்டாஷா நடித்திருக்கும் படம் “ஜிப்ஸி”.  இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் வழங்க எஸ். அம்பேத் குமார் தயாரிக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
 
இப்படத்தின் டீசர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரைவேற்பை பெற்றது. கடந்த வாரம் இந்த படத்தில் இடம் பெரும் “வெரி வெரி பேட்” என்கிற பாடல் பிரோமோ வெளியாகி விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியிருந்தது. இன்று முழு பாடலையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

சமூக அவலங்களை உரக்க பேசும் போராளிகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காவல் துறையின் ஒடுக்குமுறையை துள்ளியமாக வெளிப்படுத்துகிறது இப்பாடலின் வரிகள். இச்சமூகத்தில் நடக்கும் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போராளிகளை காவல்துறை கைது செய்து வைத்திருக்கும் சிறைச்சாலையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை காவல் துறை கைது செய்து அழைத்து வருகிறது. அப்போது ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் போராளிகள் எதற்காக உங்களை கைது செய்து வருகிறார்கள் என்று கேட்கும் படி பாடலின் காட்சி அமைந்திருக்கிறது.
 

 கடந்த சில ஆண்டுகளாக மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  அதில் நியூட்ரினோ, 8வழிசாலை, போலி சாமியார்களை எதிர்ப்பது, சாதி கொடுமையை எதிர்ப்பது போன்ற போராட்டங்களில் நீங்கள் ஈடுப்பட்டீர்களா என்று கைதாகி இருப்பவர்கள் கேட்க, சந்தோஷ் நாராயணன் பாட்டு போட்டதற்காக என்னை கைது செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
 
சந்தோஷ் நாராயணனை அடைக்கும் அதே சிறையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் ஜீவாவை பார்த்து சந்தோஷ் நாரயணன் தோழர் நீங்க எப்போ வந்தீங்க என்று கேட்பதில் இருந்து தொடங்குகிறது பாடல்.
 
 “காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு எங்கல அடிக்கிற, காக்கி கலரு காக்கி கலரு கழுத்த புடிச்சி நெரிக்கிற” என காவல்துறையின் அடக்குமுறைகளை  வரிசைகட்டி விமர்சிக்கிறது பாடல். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து ஊழியம் செய்கிறது காக்கி. ஏழை எளிய மக்களை தூக்கி போட்டு மிதிக்கிறது என அடுத்தடுத்த வரிகளில் காட்டமான விமர்சனங்கள் அனல் பறக்கிறது. நாட்டில் ரவுடிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும் எதுவும் கேட்க முடியவில்லை ஆனால் எங்களை அடிப்பதுதான் ஜனநாயகமா என்று காத்திரமான கேள்வியை முன்வைக்கிறது யுகபாரதியின் வரிகள்.
 
சிறைச்சாலையிலும், நீதிமன்றத்திலும் இருப்பது போல் காட்சியாக்கப்பட்டிருக்கிறது பாடல். இப்பாடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், திருநங்கை கிரேஷ் பானு, திருமுருகன் காந்தி, உள்ளிட்ட இன்னும் பலர் இந்த பாடலில் வருகிறார்கள். சிறைசாலை போல் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் புரட்சியாளர் அம்பேத்கர், மார்க்ஸ், தந்தை பெரியார், சே குவேரா, தமிழீழ விடுதலை போராளி பிரபாகரன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்ற இத்தகைய சூழலில் இப்பாடல் புதியதொரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று கூறலாம்.  தொடர்ச்சியாக ராஜுமுருகன் எடுக்கும் படங்கள் அனைத்தும் சமூகத்தில் உள்ள அவலங்களை வெளிபடுத்தக் கூடியதாகவே இருக்கிறது. இவர் இயக்கிய ஜோக்கர் படம் அப்படியானதுதான். விமர்சன ரீதியாக மாபெறும் வெற்றி பெற்ற படமாக இருந்தது. அந்த வகையில் ஜீவா நடித்திருக்கும் இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடலே இத்தனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் படம் பேசும் அரசியல் வெளிப்படையானதாக இருக்கும் என்று கருத்து சொல்ல துவங்கி விட்டனர் ரசிகர்கள். படம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை  இப்பாடல் அதிகரித்திருகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்