தமிழ் நாடு அரசு கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் கலைமாமணி விருதை விஜய் சேதுபதி இன்று பெற்றார்.
கலைத்துறையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி சாதனை புரிந்து வரும் நடிகர்கள், ஓவியர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என கலைத்துறையில் பணியாற்றி வரும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பாக கலைமாமணி விருது ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு எட்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து விருது வழங்கப்பட்டது. சுமார் 200 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. கலைஞர்கள் பலரும் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர். சிலர் விருது வழங்கும் தேதிகளில் படப்பிடிப்பில் இருந்ததால் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.
அதன்படி, விஜய்சேதுபதி, யுகபாரதி, உள்ளிட்ட கலைஞர்கள் இன்று தமிழ் மொழித்துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனை சந்தித்து விருதினை பெற்றுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.