முகப்புகோலிவுட்

‘மெர்சல்’ படத்தில் என்ன ஸ்பெஷல்? என்னென்ன எதிர்பார்க்கலாம்?

  | October 15, 2017 16:23 IST
Vijay Mersal

துனுக்குகள்

 • முதன்முதலாக நடிகர் விஜய் மூன்று வேடங்களில் தோன்றுகிறார்
 • விஜய் அவர்கள் 30 நாட்கள் ஒரு முன்னணி மேஜிசியனிடம் பயிற்சி பெற்றார்
 • ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் தழுவல் என்றும் கூறப்படுவது
அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் நடிகர் விஜயின் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது. முதன்முதலாக நடிகர் விஜய் மூன்று வேடங்களில் தோன்றுகிறார் என்பதைத் தாண்டி, ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று முன்னணி நடிகைகள், ‘வைகைப் புயல்’ வடிவேலு, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா என இப்படத்திலுள்ள பல விஷயங்கள் இப்படத்தை எல்லா தரப்பினரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. தீபாவளி அன்று கிட்டத்தட்ட உலகம் முழுக்க 3400 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், பட்ஜெட் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ்ப்படமும் ஆகும்.

இந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில், ஒரு சினிமா ரசிகன் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்பதிவில் காணலாம்:

1. விஜயின் ட்ரிபிள் ஆக்ஷன்
முதன்முதலாக நடிகர் விஜய் மூன்று வேடங்களில் தோன்றுகிறார் என்ற தகவலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. ‘படத்தில் விஜய் சாருக்கு 3 வேடமா, அல்லது 2 வேடமா என்றெல்லாம் நான் சொல்லவே இல்லை’ என இயக்குனர் அட்லீ குழப்பினாலும் கூட, இப்படத்தில் டாக்டராக ஒரு விஜய், மேஜிசியன் ஆக ஒரு விஜய், ஃபிளாஷ்பேக் பகுதியில் விவசாயியாகவும் மக்கள் உரிமைகளுக்காக போராடும் கிராமத்து இளைஞனாகவும் மூன்று வேடங்களில் விஜய் தோன்றியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது. இந்த மூன்று வேடங்களிலும் விஜய் எப்படி நடித்திருப்பார் என்கிற எதிர்பார்ப்பும் நம்முள் ஏற்படாமல் இல்லை. குறிப்பாக, மேஜிசியன் விஜய் கதாபாத்திரமும் ஃபிளாஷ்பேக்கில் வரும் அப்பா விஜய் கதாபாத்திரமும் ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேஜிசியன் கதாபாத்திரத்தை திரையில் சிறப்பாக கொண்டுவர, நடிகர் விஜய் அவர்கள் சில சின்ன சின்ன மேஜிக் செய்ய கிட்டத்தட்ட 30 நாட்கள் ஒரு முன்னணி மேஜிசியனிடம் பயிற்சி பெற்றதாகவும், இந்த வேடம் குழந்தைகளால் பெரிதளவில் ரசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

‘மெர்சல்’ திரைப்படம் ‘மூன்று முகம்’ திரைப்படத்தின் தழுவல் என்றும், ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் தழுவல் என்றும் கூறப்படுவது உண்மையா என தெரியாவிடினும் கூட, கண்டிப்பாக தந்தையின் மரணத்திற்காக பழி வாங்கும் ‘ரிவெஞ்ச்’ கதையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

2. எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் எனும் பெரும்பலம்

‘பாகுபலி 1 & 2’ மற்றும் ‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘விக்ரமார்குடு’ உட்பட எத்தனையோ தெலுங்கு மெகா ஹிட் திரைப்படங்களுக்கும், பிளாக்பஸ்டர் பாலிவுட் திரைப்படமான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்திற்கும் கதை-திரைக்கதை எழுதிய திரு.விஜயேந்திர பிரசாத் அவர்களே ‘மெர்சல்’ திரைப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்கிற செய்தியே, விஜய் ரசிகர்களைத் தாண்டி பலருக்கு இப்படத்தின் மேல் நம்பிக்கை வர காரணமாக இருந்தது என சொன்னால் அது மிகையாகாது. விஜயேந்திர பிரசாத் அவர்கள், ஒரு தமிழ் திரைப்படத்திற்கு எழுத்தாளராக இருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல மறக்கமுடியாத ஃபிளாஷ்பேக் எபிசோட்கள், ரொம்பவே வலுவான எமோஷனல் காட்சிகள் மற்றும் அதிரவைக்கும் திருப்பங்களைக் கொண்ட எத்தனையோ திரைக்கதைகளை எழுதிய ஒரு மேதையின் எழுத்தில் உருவாகிறது என்பதே இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

3. அட்லீயின் கதை சொல்லும் பாணி

அட்லீயின் முதல் இரண்டு படங்களான ‘ராஜா ராணி’ மற்றும் ‘தெறி’ படங்களில் பல குறைகள் இருந்தாலும், ஒரு இயக்குனராகவும் எழுத்தாளராகவும் அட்லீ ஜெயிப்பது அவரது கதை சொல்லும் பாணியால்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு சாதாரண காட்சியைக் கூட ஃபிரெஷ் ஆக காட்ட நினைப்பது, தன் படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரம் கூட ஸ்பெஷலாக இருக்கவேண்டும் என்கிற மெனக்கெடல் அவரது இரண்டு படங்களிலுமே காணப்பட்டது. நடிகர், நடிகை தேர்விலும் கூட அந்த தனித்தன்மை கவனிக்க வைத்தது; ‘ராஜா ராணி’ படத்தில் ஹீரோயினின் அப்பாவாக தோன்றிய சத்யராஜ், ‘தெறி’ திரைப்படத்தில் வில்லனாக வந்த இயக்குனர் மகேந்திரன், விஜய்யின் மகளாக தோன்றிய பேபி நைனிகா போன்றோரே அட்லீயின் படங்களை இன்னும் கலர்ஃபுல் ஆக்குகின்றனர். ஒரு மிகப்பெரிய ஸ்டாரை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கூட, கதைக்கு தேவையில்லாமல் ஹீரோவுக்கு ஒரு அறிமுக சண்டைக்காட்சியோ அறிமுக பாடல் காட்சியோ வைக்காமல் ‘ஈனா மீனா டீக்கா’ என்றொரு பாடலை முதல் பாடலாக வைத்தது கூட அட்லீ தன் கதைக்கு கொடுத்த மரியாதை தான்.

‘தெறி’ திரைப்படத்தின் கடைசி 40 நிமிடம் சொதப்பல்தான் என்றாலும் கூட, 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ஒரு ரசிகனை இரண்டு மணிநேரம் சோர்வடைய விடாமல் கதை சொல்லும் கலை தெரிந்த இயக்குனர் அட்லீ என்கிற வகையில், ‘மெர்சல்’ அவரது முந்தைய இரு படங்களை விட நன்றாகவே இருக்கும் என ஒரு நம்பிக்கை பிறக்கிறது.

4. ஃபேமிலி ஆடியன்ஸை கவரக்கூடிய அம்சங்கள்

இதற்கு முன் விஜய்-அட்லீ கூட்டணியில் வெளியான ‘தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணம், விஜய் ரசிகர்களைத் தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸூம் ரசிக்கும்படி அந்த படத்தின் காட்சியமைப்புகள் இருந்ததேயாகும். பேபி நைனிகா வரும் க்யூட்டான காட்சிகள் உட்பட பல விஷயங்கள் அப்படத்தின் யுஎஸ்பி ஆக அமைந்தது. அதே போல, இப்படத்திலும் அப்பா விஜய்யின் ஃபிளாஷ்பேக், மகன் விஜய்-எஸ்.ஜே.சூர்யா மோதல் உள்ளிட்ட face off காட்சிகள், மூன்று கதாநாயகிகளின் பங்களிப்பு, விஜய்யின் அப்பாவாக தோன்றுகிறார் என சொல்லப்படும் வடிவேலு அவர்களின் கதாபாத்திரம் உள்ளிட்டவை எல்லா தரப்பினரையும் கவரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

5. விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்!

‘தெறி’ படம் முழுக்கவே ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள், நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும்படி இருந்தன. உதாரணத்திற்கு, ‘ஜோசப் விஜய்’ என்கிற நடிகர் விஜய்யின் இயற்பெயரை ‘ஜோசப் குருவில்லா’ ‘விஜய் குமார் ஐபிஎஸ்’ என படத்திலும் விஜய்யின் பெயராக வைத்தது, நடிகர் விஜய்யின் கோட்டையான கேரள தேசத்தில் இருக்கும் அவரது வெறித்தனமான ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விஜய் அவர்களை ஒரு காட்சியில் நீளமான ஒரு மலையாள வசனத்தை பேச வைத்தது என சில விஷயங்களை சொல்லலாம். அதே போல ஒரு விஜய் ரசிகனாக, விஜய் அவர்களின் மொத்த ஆற்றலையும் திரையில் கொண்டு வந்திருந்தார் அட்லீ. சமந்தாவுடனான காதல் காட்சிகள், அம்மாவிடம் குழையும் குறும்பு, கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் பேசும் உணர்வுப்பூர்வமான காட்சி என விஜய் என்கிற ஸ்டாரை கனகச்சிதமாக கையாண்டிருந்தார்.

அந்த வகையில், ‘மெர்சல்’ திரைப்படத்திலும் விஜய் அவர்களின் ரசிகர்களை மெர்சலாக்க பல விஷயங்கள் உண்டு என்பது போஸ்டர்களையும், டீசரையும் பார்த்தாலே தெரிகிறது. 25 ஆண்டுகளாக ‘இளைய தளபதி’ என அழைக்கப்பட்ட விஜய் அவர்களின் டைட்டில் பெயரை ‘தளபதி’ விஜய் என மாற்றிய அட்டகாசமான ஐடியாவில் தொடங்கி, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகள் மற்றும் ‘ரசிகனே தலைவன்’ என்கிற வரிகளைக் கொண்ட போனஸ் டிராக் உட்பட ‘மெர்சல்’ படம் முழுக்க விஜய் ரசிகர்களுக்காக ஒரு பெரிய விருந்தே தயாராக இருக்கிறது என்றே தோன்றுகிறது. இது போக, இப்படத்தில் வரும் அப்பா விஜய் கதாபாத்திரத்தின் பெயரே ‘தளபதி’ தான் என்றும் சொல்லப்படுகிறது.

மேற்கூறிய 5 விஷயங்களை தாண்டி 5 நாள் தீபாவளி விடுமுறை, 3400 அரங்குகளில் மிகப்பெரிய ரிலீஸ், தீபாவளிக்கு வெளியாகும் ஒரே பெரிய திரைப்படம் என பல காரணங்களால் ‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றி, ரிலீஸிற்கு முன்பே 90% உறுதியாகிவிட்டது. இத்திரைப்படம் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலோ அல்லது விஜய் ரசிகர்களை மட்டும் திருப்திபடுத்தும் அளவுக்கு இருந்தால் கூட போதும், ரொம்ப சுலபமாகவே சூப்பர் ஹிட் திரைப்படமாக ஆகிவிடும். மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்தக்கூடிய ஒரு திரைப்படமாக இருந்தால் இத்திரைப்படம் வரலாறு காணாத ஒரு வசூல் புரட்சியை செய்யும் என மொத்த சினிமாத்துறையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வகையிலும் சேராமல் ரொம்ப மோசமாக இருந்துவிட்டால் மட்டுமே, ‘மெர்சல்’ படத்திற்கு ஆபத்து!

இந்த கணிப்புகளுக்கு எல்லாம் இடையே, நடிகர் விஜய்யின் ‘ஃபிளாப் சென்டிமெண்ட்’ ஒன்றையும் ‘மெர்சல்’ படத்தின் வெற்றி மூலம் உடைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அட்லீயிடம் இருக்கிறது. அதாவது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடித்தால் படம் ஓடாது (உதயா. அழகிய தமிழ்மகன்), தன் குடும்பத்திற்காக பழிவாங்கும் கதைகளில் விஜய் நடிக்கும் படங்கள் ஓடாது (ஆதி, வில்லு, புலி) என்றும் நீண்ட நாட்களாய் விஜய் அவர்களின் கேரியரில் இருக்கும் இந்த நெகட்டிவ் செண்டிமெண்டை ‘மெர்சல்’ உடைக்கும் என நம்புவோம். :) 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com