முகப்புகோலிவுட்

'இரும்புத் திரை' முதல் பாதி எப்படி? First Half Review இதோ..!!

  | May 09, 2018 15:01 IST
Irumbu Thirai Movie

துனுக்குகள்

  • அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியிருக்கும் படம் 'இரும்புத்திரை'
  • விஷால், அர்ஜூன், சமந்தா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்
  • படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்குத் திரையிடப்பட்டது
திரையுலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தின் முதல் பாதி மட்டும் (இடைவேளை வரை) காண்பிக்கப்பட்டு, ஒரு 'பிரஸ் ஷோ' நடத்தப்பட்டிருக்கிறது. விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் அறிமுக இயக்குனர் மித்ரனின் 'இரும்புத்திரை' திரைப்படத்திற்குத்தான் இப்படியொரு புதுமையான 'பத்திரிக்கையாளர் சிறப்புக் காட்சி' நடத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சுவாரஸ்யமான டீசர் மற்றும் டிரைலர் மூலம், 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தங்களது படத்தின் மீது அதீத நம்பிக்கை இருந்தாலொழிய, எந்த பெரிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ தங்களது படத்தின் முதல் பாதியை இப்படி திரையிட்டுக் காட்ட முன்வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்!  
 
சரி.. அந்த முதல் பாதி எப்படியிருக்கிறது? விமர்சனம் இதோ...  
 
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வங்கிக்கணக்குகளில் ஊடுருவி லட்சம் லட்சமாக பணத்தைத் திருடும் hackers மற்றும் சைபர் க்ரைம் கும்பலை அறிமுகப்படுத்தி தொடங்குகிறது திரைப்படம். யாராலும் பிடிக்க முடியாத, ஆனால் எல்லோரையுமே கண்காணிக்கக்கூடிய அளவிற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் White Devil என்கிற வில்லன் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறான். காவல் துறை அதிகாரியிம் பணத்தை திருடிவிட்டு அந்த அதிகாரியையே மிரட்டுமளவிற்கு எவராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும் வில்லன்! மறுபுறம், பயிற்சியில் இருக்கும் நேர்மையான, எளிதில் எதற்கும் கோபமடையக்கூடிய இளம் ராணுவ அதிகாரியான கதாநாயகன். இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் புள்ளிதான், இடைவேளை காட்சி. ஹீரோவும் வில்லனும் பேசும் தொலைபேசி உரையாடலுடன் முதல் பாதி முடிய, இரண்டாம் பாதி எவ்வளவு பரபரப்பாய் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். 
 
படம் தொடங்கிய முதல் 20, 30 நிமிடங்கள் சற்று மந்தமாகவே நகர்ந்தது. சிரிப்பை வரவழைக்க தவறும் பார் காமெடி, ராணுவ பயிற்சி தள காமெடிகள், அவசியமின்றி வரும் ஒரு ஹீரோ அறிமுகப்பாடல், அதற்கடுத்து உடனேயே ஹீரோயினின் அறிமுகம், ரொமான்ஸ் டிராக் என படம் நகர்ந்துகொண்டிருக்கவே, 'ஒரு வேளை ரொம்ப சுமாரான படமாக போய்விடுமோ' என்கிற பயம் எழவே செய்தது. ஆனால், அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே படம் வேகமெடுத்து மிகவும் விறுவிறுப்பாக நேர்க்கோட்டில் பயணிக்க தொடங்கிவிட்டது. அதன் பின் வந்த காதல் காட்சிகள் கூட ரசிக்கும்படி இருந்தது. செண்டிமெண்ட் காட்சிகளும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தியது. சமந்தா விஷாலுக்கு அறிவுரை கூறுவது, விஷால் தன் தங்கையிடம் பேசி மனம் மாறுவது, டெல்லி கணேஷ் வரும் எமோஷனல் காட்சி என எல்லாமே மிக அழகாக கையாளப்பட்டிருந்தது. அந்த எமோஷனல் உணர்வுகளே ஹீரோவின் இழப்பிற்காக நம்மையும் கூட இன்னும் அதிகமாக பதற்றமடைய செய்கிறது. ரோபோ ஷங்கரின் காமெடியும், ஆங்காங்கே அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்தியது. 
 
ராணுவ அதிகாரிக்கு கடன் தர வங்கிகள் யோசிப்பது, 'கொடுத்த கடனை இப்படி தப்பான முறையில கேட்குறது கூட பரவாயில்லை.. ஆனா, போன் பண்ணி போன் பண்ணி அந்த கடனை எங்களை வாங்க வைக்குறதே நீங்கதானேடா' போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தையே பல மடங்கு உயர்த்திக் காட்டிட பெரிதும் உதவியிருக்கிறது. 
 
 'உன் மாச சம்பளத்துல பத்தாயிரம், பத்தாயிரமா காலி பண்றேன் பாக்குறியா?' 'என்னை பொறுத்தவரைக்கும், நீ வெறும் நம்பர்.. நம்பரா மட்டும் இருந்தா, பிரச்சினையில்ல.. ஆள் ஆகணும்ன்னு நினைக்காத' என முகமே காட்டாமல் மிரட்டும் White Devilன் ஆட்டமும், ஹீரோவுடனான ஆடுபுலி ஆட்டமும் இரண்டாம் பாதியில் தான் இன்னும் பலமடங்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முழு விமர்சனம், வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்! 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்