முகப்புகோலிவுட்

“இயக்குநர் பா.இரஞ்சித்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது”எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா!

  | June 19, 2019 13:18 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • இரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்ட கத்தி
  • தொடர்ந்து சமூக பிரச்னைகளக்கு குரல் கொடுத்து வருகிறவர்
  • காலா திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானதுதான்
இயக்குநர் பா.இரஞ்சித் தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார். அப்போது ராஜராஜ சோழனை தங்களுடைய சாதிக்காரன் என்று 8 சாதியினர் போட்டிப் போடுகிறார்கள் என்றும் அதில் தலித் மக்களும் இருக்கிறார்கள், அப்படி ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்க வேண்டி அவசியம் இல்லை என்று சில குற்றச்சாட்டுகளை கருத்தியல் ரீதியாகவும் ஆய்வுகள் அடிப்படையிலும் முன்வைத்திருந்தார். அவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளில் ராஜராஜன் பற்றிய விமர்சனம் மட்டும் காட்டு தீ போல் பரவி இன்று மிகப்பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.
 
இந்த பிரச்னையைத் தொடர்ந்து இரஞ்சித்திற்கு கொலை மிரட்டல் விடுப்பது. பொய் வழக்கு தொடுப்படு என கருத்து சுதந்திரத்திற்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்னை குறித்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினேன்.
 
 
“இந்த பிரச்னையில் நீதி மன்றம் குறித்து பேசும் போது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் கேள்வி எழுப்பக்கூடாது என்றால் உலகம் முழுவதும் உள்ள வரலாற்று துறைகளை மூடிவிடலாமே, கடந்த காலம் என்பதில் ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு கொடுமைகளை சந்தித்தவர்கள் இருக்கிறார்கள். அதனுடைய வலிகளையும் துயரத்தையும் சுமந்து வந்த ஒரு பிரிவினர். ஏன் நம் முன்னோர்களுக்கும் நமக்கும்  இந்த நிலை என்று கடந்த காலத்தை திரும்பி பார்த்து, கடந்த காலத்தின் மீது ஒரு விசாரணை நடத்துவார்கள் அல்லவா. அது இன்னொருவருக்கு எதிரான குற்ற பத்திரிக்கையாகக் கூட இருக்கலாம் அதை தவிர்க்க முடியாது.
 
நான் ஏன் நிலமற்றவனாக இருக்கிறேன், நான் ஏன் வாழ்வாதாரமற்றவனாக இருக்கிறேன், என்னுடைய  நம்பிக்கை ஏன் பொதுத்தளத்தில் கொண்டாடப்படாமல் இருக்கிறது. என்னுடைய உணவு ஏன் பொது உணவாக இல்லாமல் இருக்கிறது. என்னுடைய கடவுள்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுப்பி இதைப்பற்றி ஆய்வு செய்யும் போது நான் கடந்த காலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி போகும் போது, நிராகரிக்கப்பட்ட விஷயங்கள் இருக்கும், கடுமையாக விமர்சிக்கக்கூடிய விஷயமும் இருக்கும்.
 
காலம் கடந்து ஏன் இதை பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள், ராமர் கட்டின பாலம் என்று சொல்லப்படுவது 10000 ஆண்டுகள் பழமை அல்லவா. அதை மேற்கோள் காட்டி எதற்கு சேது சமுத்திர பாலம் கட்டுவதை தடுத்தார்கள். ஆயிரம் ஆண்டு பழமை என்பதை கூறி பாபர் மசூதியை இடித்தார்கள் அதை ஏன் அனுமதித்தார்கள்.
 
இரஞ்சித் நேரடியாக ராஜராஜ சோழனை குற்றம் சாட்டுவதற்காக அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை. மாறாக சுயசாதி பெறுமையை பேசுவதற்காக ராஜ ராஜ சோழனை எட்டு சாதியினர் சொந்தம் கொண்டாடுகிறார்கள், அதில் தலித் சமூக மக்களும் இருக்கிறார்கள் அது தவறு அது தேவையும் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்.
 
 
12லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை இழந்த சமூகம் இது. இந்த நிலம் எப்படி பரிக்கப்பட்டது என்பதற்கான வரலாற்றை தேடி செல்வதும் அதன் மீது விமர்சனங்கள் வைப்பதும் இயல்புதான். அவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இவர் ராஜராஜ சோழனை அவமதித்து விட்டார் என்று சித்தரிக்கிறார்கள்.
 
எச்.ராஜா போன்றோர் இரஞ்சித்தின் குடும்பப் புகைப்படத்தை பதிவிட்டு இழிவுபடுத்தும் செயலுக்கு எச்.ராஜா கைது செய்யப்படவேண்டும். அதை இரஞ்சித் பெரும்தன்மையாக விட்டிருக்கிறார். அப்படியே வழக்கு தொடுத்தாலும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள்  எச்.ராஜா போன்ற ஆட்களை கைது செய்ய தைரியம் கிடையாது. நீதி மன்றம் கைது செய்யச்சொல்லியும் கூட எஸ்.வி சேகர் போன்றோரை இவர்களால் கைது செய்ய முடியவில்லை. அந்த வழக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.
 
இப்படி சாமானியர்கள் எத்தனைப்பேரை இந்த நீதிமன்றம் மன்னித்து விட்டிருக்கிறது என்கிற கேள்விகள் இருக்கிறது. நிலம் தொடர்பான கேள்விகளை இயக்குநர் இரஞ்சித் தொடர்ச்சியாக வைத்து வருகிறார். அவருடைய படங்களிலும் அவை பிரதிபலிக்கிறது.
 
இரஞ்சித் கூறும் கருத்துகளுக்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. அதன் அடிப்படையிலே அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
 இவரைப்போன்று மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது என்று நினைப்பவர்கள் இவர் மீது இது போன்ற ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகிறார்கள் இந்த சூழலில் அவரை பாதுகாப்பதும் நமது கடமையாக இருக்கிறது” என்றார்.
 
இதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித்திற்கு ஆதரவு கேட்டு இணையத்தில் ஸ்டாண்ட் வித் இரஞ்சித் என்கிற ஹேஸ் டேக்கும், கையெழுத்து லிங்கும் வைரலாகி வருகிறது. அதில் பலரும் இரஞ்சித்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டு வருகிறார்கள்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்