முகப்புகோலிவுட்

இசை சாம்ராஜ்யத்தின் இளவரசன் யுவன் சங்கர் ராஜா!

  | August 31, 2019 18:25 IST
Yuvan

துனுக்குகள்

  • யுவக் சங்கர் ராஜாவிற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
  • 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார்
  • இவருடைய பினினணி இசைக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு
இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக தமிழ் சமூகத்தை தன் இசையால் வசப்படுத்தி வைத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள்.
 
திரைப்படங்களில் காட்சிக்கு உயிர் கொடுப்பது பின்னணி இசையே. அப்படி யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அறிமுக நாயகனாக இருந்தாலும் சரி, முகம் தெரியாத எளிமையான நாயகனாக இருந்தாலும் யுவனின் இசையில் மாஸ் ஹீரோவாக்கிவிட முடியும். கொண்டாடிட முடியும்.
 
இவருக்கு இயக்குநர்களின் இசை அமைப்பாளர் என்கிற இன்னொரு பெயரும் உண்டு. இயக்குநர் ராம் இதனை ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இயக்குநர் ராம் என்றால் எப்படி  இசை அமைக்க வேண்டும். இயக்குநர் சுந்தர் சி என்றால் எப்படி இசை அமைக்க வேண்டும். செல்வராகவன் என்றால் எப்படி இசை அமைக்கவேண்டும். அவர்கள் எதை விரும்புவார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் கலைஞன் என்று பாராட்டி இருந்தார். ஆனால் எந்த இயக்குநருடன் பணியாற்றினாலும் அந்த படத்தின் இசையை கேட்டதுமே இது யுவனின் இசைதான் என்று இளைஞர்கள் எளிமையாக கண்டு பிடித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு மக்களின் இசை அமைப்பாளராகவும் இருப்பவர் யுவன். 90களின் தொடக்கத்தில் புது முக இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் தோன்றி கோலோச்சத் தொடங்கினர். திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் தோன்றிய இசை அமைப்பாளர் தங்களுக்கான இடத்தை தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது அவ்வளவு எளிமையான காரியமும் இல்லை.
 
1997ம் ஆம் ஆண்டு ‘அரவிந்தன்' படத்தில் தொடங்கிய யுவனின் இசை பயணம் அடுத்தடுத்து வெகுஜன மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. விளையாட்டாக தொடங்கிய யுவனின் இசை பயணம் பெரும் போராட்ட களத்தில் போராடியே ஆக வேண்டும் என்கிற இடத்தில் நின்றது. அன்பு, காதல்,அரவணைப்பு, கோபம் என எல்லா வற்றிலும் உணர்வுகளோடு கலந்த யுவனின் இசை தமிழ் இளைஞர்களின் வாழ்வியலின் ஒரு அங்கமாக மாறியது. இவரது இசை கண்ணீர் வரவைக்கும், இவரின் இசை காதலை சுமக்கும், சுமக்கச்செய்யும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் யுவன் சங்கர் ராஜா குடும்ப அட்டையில் பதியப்படாத குடும்ப உறுப்பினராக மாறினார்.
 
சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், முன்னணி நடிகர் புது முக நடிகர், என்கிற எந்த விதமான வரையரையும் அவர் வைத்ததில்லை. கதை நன்றாக இருக்கிறது என்றால் உடனடியாக தன் பணியை துவங்கி விடுவார். காட்சிகளுக்கு மட்டும் இல்லை யுவனின் இசை சில திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்த வரலாறும் உண்டு. புது முக நடிகர், இந்த படம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அனைவரின் உதடுகளும் இப்படத்தின் பாடல்களை முனுமுனுக்க வைத்தார் யுவன் சங்கர் ராஜா என்று செல்வராகவன் ஒரு நிகழ்வில்  ‘துள்ளுவதோ இளமை', ‘காதல் கொண்டேன்'  படங்கள் பற்றி கூறியிருந்தார். காதல் கொண்டேன் படத்தின் பாடலை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது யுவனின் இசை.
 
இதுவரை எவ்வித கர்வமும், செருக்கும் இல்லாமல் ஆண்டுக்கு பத்து படங்களும் செய்வார், ஒவ்வொரு படத்திற்கு முழு ஈடுபாடும் பங்களிப்பும் கொடுத்து போட்டிகள் நிறைந்த இந்த களத்தில் அசைக்கமுடியாத சக்தியாக நிற்பது என்பது அசாத்தியமான விஷயம்.
 
இசைஞானி இளையராஜா எப்படி தவிர்க்க முடியாதவராக மாறினாரோ, அதே போல் யுவன் சங்கர் ராஜாவும் ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் தனது திறமையை பொதுநீரோட்டத்திலே தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக உருவெடுத்து வருகிறார். இவர் தொடாத இசை எது. பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் இத்தமிழ் சமூகத்தில் அந்தந்த மண்சார்ந்த இசையும் தனது திறமையால் அள்ளிக் கொடுத்து வருகிறார்.
 
விருதுகளை நோக்கி இவரது இசை பயணம் தொடங்கவில்லை, பயணத்தின் போது விருதுகள் இவரை விட்டதில்லை. இவற்றையெல்லாம் கடந்து அன்பும், அறமும் நிறைந்த இசையால் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை அமைத்து வருகிறார்.  இசையால் நிரம்பட்டும் வாழ்வு. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யுவன்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்