முகப்புவிமர்சனம்

ஆதியின் நட்பும், காதலும் இணைந்து கலக்கும் 'நான் சிரித்தால்' - விமர்சனம்

  | Friday, February 14, 2020

Rating:

ஆதியின் நட்பும், காதலும் இணைந்து கலக்கும் 'நான் சிரித்தால்' - விமர்சனம்
 • பிரிவுவகை:
  கமர்சியல்
 • நடிகர்கள்:
  ஹிப் ஹாப் தமிழா ஆதி, கே.எஸ். ரவிக்குமார், ஐஸ்வர்யா மேனன்
 • இயக்குனர்:
  ராணா
 • தயாரிப்பாளர்:
  சுந்தர் சி மற்றும் குஷ்பு சுந்தர்
 • பாடல்கள்:
  ஹிப் ஹாப் தமிழா ஆதி

வில்லனை பார்த்து 'கெக்க பெக்க' என்று சிரிக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் மோதலே 'நான் சிரித்தால்'...  

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்'.. இயக்குனர் ராணா இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் குஷ்பு சுந்தர் தயாரிப்பில் காதலர் தினமான இன்று வெளிவந்துள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் கதையின் நாயகன் அறிமுகமாக, அதிரடியாக அறிமுகமாகிறார்கள் கதையின் வில்லன்கள். இணையதள பிரபலங்கள் வரிசையாய் வலம்வர சற்று பொறுமையாகவே நகர்கின்றது கதைக்களம். சோகம், பயம் என்று எந்த உணர்ச்சி வந்தாலும் மனம்விட்டு சிரிக்கும் வியாதி கொண்ட ஹீரோ ஆதிக்கு, அந்த வியாதி எப்படி வந்தது என்பதை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கும் டைரக்டருக்கு ஒரு 'சபாஷ்'. ஹிப் ஹாப் ஆதியின் இசை என்பதால் பின்னணி இசைக்கும், பாடலுக்கும் படத்தில் பஞ்சமில்லை அதிலும் 'பிரேக் அப்' பாடலில், ஆதியின் இசையும், அதற்கேற்ற அவரின் நாடனும் ரசிகர்களையும் நடனமாட வைக்கின்றது. 

ஒரு சில நொடிகளே வந்தாலும் யானை ஜோக் கதிர், தான் வரும் காட்சிகளில் மக்களை சிரிக்க வைக்கிறார். நட்பு, காதல், என்று முதல் பாதி நகர, இறுதியில் ஹீரோ வில்லனை சந்திக்க படம் சூடு பிடிக்கிறது, சூப்பர் ஸ்டார் பாணியில் இடைவேளை காட்சி அமைய அரங்கம் அதிர்கிறது. ஹிப் ஹாப் ஆதிக்கு இது கண்டிப்பாக, அவர் மறக்க முடியாத ஒரு இன்டெர்வல் பிளாக் என்று கூறினாலும் அது மிகையல்ல. சோகத்திலும், பயத்திலும் சிரிக்கும் நோய் கொண்ட நாயகனுக்கு அது எப்படி பாதகமாகவும் அதே சமயம் சாதகமாகவும் அமைகிறது என்பதே படத்தின் மீதிக்கதை  

மாபெரும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், இந்த படத்தில் தனது வில்லத்தனத்தை சிறப்பாக காட்டியுள்ளார். அவர் தோன்றும் காட்சிகளில் அவரின் அசால்டான நடிப்பால் அடிக்கடி ஸ்கோர் செய்துள்ளார். ஆதியின் 'அப்பாவாகவும், ஆம்புலன்ஸ் ட்ரைவராகவும்' தனது பாணியில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் படவா கோபி. நாயகி ஐஸ்வர்யா மேனனை காதலுக்கும், பாடலுக்கும் மட்டும் பயன்படுத்தாமல், கதையோடு ஒன்றவைத்திருக்கும் ராணா-விற்கு வாழ்த்துக்கள். படத்தில் காமெடி இல்லையே என்று நினைக்கும்போது சரியாக களமிறங்குகிறார்கள் அந்த மூன்று பேர். ஆம், ரவி மரியா, முனீஷ்காந்த் மற்றும் ஷா ரா-வின் காமெடி காட்சிகள் பலத்த கைதட்டலை பெறுகிறது.

கதையில் நிறைய நிறைகள் இருந்தாலும், காட்சி அமைப்பிலும், எடிட்டிங் ஒர்க்கிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று அடிக்கடி நினைக்கவைக்கிறது கதையின் ஓட்டம். முதல் பாதி 'உம்முனும்' இரண்டாம் பாதி 'கும்முனும்' அமைத்திருக்கிறது என்பது பலரின் கருத்து.   

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் எப்படி சண்டை வந்தது ?. அவர்களுக்குள் சண்டை வர காரணமான அந்த நபர் யார் ?, இறுதியில் ஹீரோ வில்லனை வீழ்த்தினாரா ? என்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறது 'நான் சிரித்தால்'..

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்