முகப்புவிமர்சனம்

போதை குழியில் பலியாகும் மானுடம் - 'போதை ஏறி புத்தி மாறி' விமர்சனம்!

  | Friday, July 12, 2019

Rating:

போதை குழியில் பலியாகும் மானுடம் - 'போதை ஏறி புத்தி மாறி' விமர்சனம்!
 • பிரிவுவகை:
  திரில்லர்
 • நடிகர்கள்:
  தீரஜ், பிரதாயினி,மீரா மிதுன், ராதா ரவி
 • இயக்குனர்:
  சந்ரு கே.ஆர்
 • பாடல்கள்:
  கேபி

இயக்குநர் சந்ரு கே.ஆர் இயக்கத்தில் போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விபரீதங்களை மய்யப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

இந்தியா உலக நாடுகளில் இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடுகளில் ஒன்று என ஆய்வுகள் சொல்கிறது. இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் முன்னேறிய நாடாக இருந்திருக்க வேண்டும். இளைஞர்களின் ஆற்றலை ஆக்க பூர்வமான விஷயத்திற்கு இந்த நாடு பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ அதற்கு எதிரானதாக இருக்கிறது. இன்று பெரும்பாண்மையான இளைஞர்கள் தங்களது பள்ளி பருவத்திலே போதை பழக்கத்திற்கு ஆளாகக்கூடிய சீர் கெட்டுப்போகும் சமூகச்சூழல் ஏற்பட்டிருக்கிறது. போதை பழக்கத்தால் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை இழக்கும் கதையை சொல்கிறது இப்படம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் கார்த்திக் (தீரஜ்) அழகான குடும்பம், நல்ல வேலை, நண்பர்கள் என அமைதியான ஒரு வாழ்கையை வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணவேலை நடைபெறுகிறது. நாளை திருமணம் நடக்கவிருக்கின்ற சூழலில் தன் நண்பர்களை சந்திக்க செல்கிறார். அங்கு பார்ட்டி நடக்கிறது. அந்த பார்ட்டியில் சட்டத்திற்கு எதிராக இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் போதை பொருளை எடுத்துக்கொள்ளும் தீரஜ் என்னவெல்லாம் செய்கிறார்? அதனால் ஏற்படும் விபரீதம் என்ன? அந்த ஒரு நாளில் சோலைவனமாக இருந்த அவரது வாழ்கை எப்படி பாலைவனமாக மாறியது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

17765nl

போதை பழக்கம் உள்ள இளைஞர்களின் கதை ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மாஃபியாவை கண்டு பிடிக்கும் பத்திரிகையாளர்கள் இருவரின் கதையும் படத்தை நகர்த்துகிறது.

கார்த்திக்காக நடித்திருக்கும் படத்தின் நாயகன் தீரஜ் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். எந்த போதை பழக்கமும் இல்லாதவர் முதல் முறையாக போதை பொருளை உட்கொள்ளும் போது அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

அவரின் நண்பர்களாக நடித்திருக்கும் அஜய், மைம் கோபி, அர்ஜுன், ரோஷன், சரத் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளராக வரும் பிரதாயினி இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மாஃபியாவை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து தண்டனை பெற்று தர வேண்டும் என்று முயற்சிக்கும் அவரது நடிப்பும் உடல் மொழியும் சிறப்பு.

gsje73l

ராதா ரவியின் அனுபவ நடிப்பும், ஜனனி கதாபாத்திரத்தில் வரும் துஷரா, சுரேகா வாணி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரம் என்றாலும் மீரா மிதுன் நடிப்பு கதையில் திருப்பு முனையாக அமைகிறார். கேபியின் இசையும் பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதை பொருள்களை பயன்படுத்துவதால் இளைஞர்களின் ஆற்றலும் அறிவும் எவ்வாறு வீணாகிறது, அவர்களின் எதிர்காலம் எப்படி கேள்விகுறியாகிறது என்கிற பயனுள்ள செய்தியை சொல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறது கதை. கதையின் அளவை குறைத்திருக்கலாம். அரசே மது பாட்டில்களை விற்கிறது என்கிற அவலநிலை இருக்கும் போது, சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் போதை பொருள் குறித்த கூடுதல் தகவல்களை பேசியிருக்கலாம். மொத்தத்தில் போதை ஏறி புத்தி மாறி போதை குழியில் பலியாகும் மானுடத்தின் கதை.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்