முகப்புவிமர்சனம்

சிந்திக்க நேரமில்லை ஆனால் சிரிப்பு நிச்சயம் - 'தில்லுக்கு துட்டு 2' விமர்சனம்

  | Thursday, February 07, 2019

Rating:

சிந்திக்க நேரமில்லை ஆனால் சிரிப்பு நிச்சயம் - 'தில்லுக்கு துட்டு 2' விமர்சனம்
 • நடிகர்கள்:
  சந்தானம், ஸ்ரீதா சிவதாஸ், மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ராமர்
 • இயக்குனர்:
  ராம்பாலா
 • தயாரிப்பாளர்:
  சந்தானம்
 • பாடல்கள்:
  ஷபீர்

கேரளாவை சேர்ந்த மாயா(ஸ்ரீதா சிவதாஸ்) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிறார். சென்னையின் ஒரு பகுதியில் இருக்கும் விஜி (சந்தானம்) தன்னுடைய குடியிருப்பு வாசிகளை தினமும் தொல்லை செய்து தூங்கவிடாமல் அலப்பரை செய்யும் குறும்பு நிறைந்த இளைஞராக இருக்கிறார்.

 மாயாவை காதலிக்க நினைத்து அவரிடம் ஐ லவ் யூ சொல்லும் இளைஞர்களை கொலை செய்கிறது அவரோடு இருக்கும் தீய சக்தி ஒன்று. இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்ட விஜியின் குடியிருப்புவாசியான ஒருவர், எப்படியாவது இவனை மாயாவிடம் சிக்க வைத்து, இவ்வளவு நாள் இவன் செய்த கொடுமைக்கெல்லாம் பழி தீர்த்துக்கொள்ள நினைகிறார். அதன் படி மாயாவை காதலிக்கிறார் விஜி. மாயாவின் தந்தை கேரளாவில் மிகப்பெரிய மாந்த்ரீகவாதியாக இருக்கிறார். அவர்தான் தன்னுடை பெண் யாரையும் காதலிக்கக்கூடாது என்று ஏவல் ஒன்றை பாதுகாப்புக்காக ஏவி விட்டிருக்கிறார் என நினைத்து கேரளாவிற்கு செல்கிறார் விஜி. கேரளாவிற்கு செல்லும் விஜி அந்த தீய சக்தி எப்படி மாயாவிற்கு துணையாக வந்தது, அதை அழித்து மாயாவை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

மாயாவாக நடித்திருக்கும் ஸ்ரீதா சிவதாஸ் கேரளாவை சேர்ந்தவர். தமிழ் சினிமாவிற்கு புதிய இறக்குமதி என்றாலும் தோன்றும் இடமெல்லாம் தன்னுடைய முகபாவனையிலும், பொண்சிரிப்பிலும் ரசிக்க வைக்கிறார். கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் நடிகைகள் பலரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஸ்ரீதா சிவதாஸுக்கும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பும் வாய்ப்பும் இருக்கிறது என்றே சொல்லாம்.

சின்ன திரையில் இருந்து வண்ணத்திரைக்கு குடிபெயர்ந்த சந்தானம் தன்னுடைய நக்கல் நையாண்டி பேச்சிலும், கவுண்டர் கமெண்ட்டால் ரசிகர்கள் மனதில் நல்ல காமெடி நடிகராக இடம் பிடித்திருந்தார். நவீன கவுண்டமனி என்றெல்லாம் ரசிகர்கள் இவரை கொண்டாடி தீர்த்தனர். அந்த வேலையில்தான் இவர் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ரசிகர்களை திருப்த்தி படுத்தவில்லை. சந்தானத்திற்கும் ரசிகர்களுக்கும் இடையே இடைவெளி வந்துவிட்டதோ என்கிற நேரத்தில்தான் காமெடியும், கலாட்டாவும் நிறைந்த தில்லுக்கு துட்டு ஹாரர் திரைப்டடம் வெளியானது. சந்தானம் இந்த படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். படம் பெரும் வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2 இரண்டாம் பாகம் மீண்டும் அவருக்கு மிகப்பெரிய பலமாக கை கொடுத்திருக்கிறது எனலாம்.

காமெடி காட்சிக்காக சில இடங்களில் புதிதாக ஒரு பானியை முயற்சி செய்கிறாரோ என்று தோன்றினாலும், ரன்னிங் கமெண்ட்டுகளால் மறக்க வைக்க்கிறார். படம் தொடங்கியதில் இருந்தே தோன்றும் இடங்களில் எல்லாம் தனது நடிப்பால் சிரிக்க வைக்கிறார். அவரோடு கூடவே பயணிக்கும் மொட்ட ராஜேந்திரன் கூடுதலாக சிரிக்க வைக்கிறார். கட்டுமஸ்தான உடல் அமைப்பில் இருக்கும் அவருக்கு சண்டை காட்சிகளில் கொஞ்சம் முக்கியத்துவமான இடம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றிது. விஜய் டிவி ராமர் நல்ல நகைச்சுவை கலைஞர், ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார், அவருக்கும் காமெடி நிறைந்த காட்சிகள் கொடுத்து பயன்படுத்தியிருக்கலாமோ என்கிற யோசனையும் வருகிறது. குடியிருப்பு வாசிகளாக வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான நடிப்பை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். கேரளா, சென்னை, பேய் படத்திற்கே உரித்தான பேய் பங்களா என கேமிரா செல்லும் இடமெல்லாம் சிரிப்பு நிறைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஊர்வசி இந்த படத்தில் கலக்கியிருக்றார். தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

பேய் பங்களாவில் பேய்களோடு இவர்கள் செய்யும் காட்சிகள் சிரித்து மாளவில்லை. பேய் என்கிற அச்சத்தை உடைக்கிறது காமெடி காட்சிகள். பின்னனி இசையில் ஷபீர் மிரட்டி இருக்கிறார். முழுக்க முழுக்க படம் முழுவதும் த்ரில்லர் கலந்த சிரிப்போடு நம்மை பயணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. இவர் நம்பி இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்கலாம்.

தமிழ் சினிமா திருநங்கைகளை பல ஆண்டுகளாக சித்தரித்து வந்த போக்கு மாறி, சமீபகாலமாக திரைப்படங்களில் அவர்களுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கொடுக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் திருநங்கைகள் சிலர் நடனமாடும் காட்சி இடம் பெறுகிறது. இந்த காட்சியானது மீண்டும் தமிழ் சினிமா இவ்வளவு ஆண்டு சித்தரித்த போக்கையே இயகுநரும் கையாண்டு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதை மாற்றியிருக்கலாம்.  படத்தில் போலி சாமியார்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றிய காட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும் என்றாலும் சிந்திக்க நேரம் கொடுக்காமல் சிரிக்க வைக்கிறது தில்லுக்கு துட்டு 2. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறப்பான சிரிப்பு நிறைந்த படம் பார்த்த அனுபவம் கிடைக்கும். மீண்டும் சந்தானம் ரீ எண்ட்ரீ ஆகி இருப்பதை நிச்சயம் இப்படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்