முகப்புவிமர்சனம்

டாக்டர் கேட்டதை கொடுத்து உதவிய நாயகனுக்கு இறுதியில் நேர்ந்த நிலையே இந்த 'தாராள பிரபு' - விமர்சனம்

  | Friday, March 13, 2020

Rating:

டாக்டர் கேட்டதை கொடுத்து உதவிய நாயகனுக்கு இறுதியில் நேர்ந்த நிலையே இந்த 'தாராள பிரபு' - விமர்சனம்
 • பிரிவுவகை:
  Romantic Comedy
 • நடிகர்கள்:
  Harish Kalyan, Tanya Hope, Vivek
 • இயக்குனர்:
  Krishna Marimuthu
 • தயாரிப்பாளர்:
  Screen Scene Entertainments
 • எழுதியவர்:
  Krishna Marimuthu
 • பாடல்கள்:
  Anirudh, Bharath Sankar, Inno Genga and 6 More

தமிழில் முதல் முறையாக இயக்குநராக களமிறங்கியிருக்கும் கிருஷ்ணன் மாரிமுத்துவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தான் 'தாராள பிரபு'. ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் களமிறங்க அவருடன் கைகோர்த்திருக்கிறார் 'கிளாசிக் விவேக்'. கதையின் நாயகியாக தான்யா ஹோப் மற்றும் நாயகனின் பாட்டியாக செல்வி சச்சு நடித்துள்ளார். ஏற்கனவே 2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்றபோதும், புத்தம்புதிதாய் தமிழில் தந்திருக்கும் இயக்குநர் மாரிமுத்துவிற்கு ஒரு சல்யூட் போட்டு விமர்சனத்தை தொடங்குவோம். 

கதை, நாயகன், நாயகி, நாயகனின் குடும்பம், நாயகியின் குடும்பம், நண்பர்கள் இவர்களுடன் 'கிளாசிக் விவேக்'. கிளாசிக் விவேக் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்த காரணம், வெகு நாட்கள் கழித்து அந்த பழைய 'கிளாசிக் சின்னக்கலைவாணர் விவேக்' இந்த படத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார் என்பதை உணர்த்தவே. 2 மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் எந்த இடத்திலும் சற்றும் சோர்வு இல்லாமல் முழுக்கதையையும் நகர்த்தியுள்ள இயக்குநருக்கு பாராட்டுக்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் நாயகன் அறிமுகமாக, தனக்கே உரித்தான ஸ்டைலில் அறிமுகமாகிறார் கதையின் அடுத்த நாயகன் விவேக்.

இந்த மாடர்ன் உலகில் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மருத்துவத்தை கடைபிடித்து, அதையே குடும்பத்தொழிலாக நடத்தி வருகின்றனர் நாயகனின் குடும்பத்தினர். அவர்கள் வசிக்கும் அதே சென்னை மாநகரில் குழந்தையின்மை குறித்து லண்டன் வரை சென்று படித்த டாக்டரான விவேக்கும் வசிக்கிறார். விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ள ஹீரோ நல்ல ஆரோக்கியமான இளைஞன், அந்த ஆரோக்கியமான இளைஞனின் உதவி திடீர் என்று ஒருநாள் விவேக்கிற்கு தேவைப்பட ஹீரோவை பின்தொடர்கிறார் டாக்டர். தனக்கு தேவையானதை தரமருக்கும் ஹீரோவை பல 'கோல்மால்' வேலைகள் செய்து இறுதியில் அவர் கேட்கும் விஷயம் 'உயிர்' சம்மந்தப்பட்ட விஷயம் என்பதை உணர்த்தி ஒரு வழியாக பணியவைக்கின்றார் அந்த டாக்டர். 

இதற்கிடையில் குடும்ப தொழிலை கவனிக்க செல்லும் ஹீரோ, வழக்கமான கண்டதும் காதல் என்ற விஷயத்தில் இறங்க, இங்கு தான் ஹீரோயின் அறிமுகம். ஹீரோயினி காதலிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் இறுதியில் தனக்கு நேர்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஹீரோவிடம் கூறி தங்களின் காதலை உறுதிப்படுத்துகிறார். காதல் பறவைகள் வானில் பறக்க பின்னணி இசை சக்கைபோடு போடுகின்றது. பாடலை முணுமுணுக்க மறந்தாலும், செவிக்கு விருந்தளிக்கிறது காதல் பாடல்கள். காதல் ஒருபுறம் இருக்க அந்த டாக்டருக்கு அடிக்கடி உதவிய ஹீரோ ஒருகட்டத்தில் அவருக்கு மேலும் உதவ மறுக்கிறார், இது தான் த்ரில்லிங்கான இடம் என்றும் நாம் யூகிக்க சின்னக்கலைவனர் அவர் பாணியில் வில்லனாக மாற இடைவேளை வருகிறது. 

இரண்டாம் பாகம் தொடங்கியது டாக்டர் செய்த வில்லத்தனத்தால் பாடாய்படுகிறார் ஹீரோ. இதற்கு இடையில் காதல் பறவைகள் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் அரங்கேற அனிரூத் குரலில் அழகாய் ஒலிக்கிறது 'பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு பாடல்'. அடுத்த என்ன வரப்போகிறது என்று நாம் யூகிக்க மறந்து கதையோடு நம்மை அழைத்து சென்றுள்ள இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். கல்யாணம் முடிந்ததும், அதுவரை காத்திருந்த அனைத்து பிரச்சனைகளும் விஸ்வரூபம் எடுக்கிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் ஹீரோ, செய்த விஷயத்திற்காக வருத்தப்படும் டாக்டர், கவலையில் மூழ்கிப்போன நாயகி. 

இந்த மூவரின் இறுதி நிலை என்ன என்பதை மிக நேர்த்தியான கதைக்களம் மூலம் வெளிப்படுத்துவதே படத்தின் மீதிக்கதை. முதலில் ஹீரோ ஹரிஷ், அடடா என்று நம்மை அடிக்கடி பாராட்ட வைக்கும் வண்ணம் மிக நேர்த்தியான நடிப்பு. காதல் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என்றும் அனைத்திலும் சிக்ஸர் அடித்துள்ளார். நாயகி தான்யா, தடம் படத்திற்கு பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். காதல் காட்சி, செண்டிமெண்ட் காட்சி, என்று எல்லாவற்றிலும் அசத்தி இருக்கிறார். கவர்ச்சி என்ற சொல்லை சற்றும் பயன்படுத்தாமல் கதையின் நாயகியை நடிப்பிற்காக பாராட்ட வைத்த இயக்குநருக்கு மீண்டும் வாழ்த்துக்கள். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் விவேக் தற்காலத்தில் படங்களில் தோன்றினாலும் அந்த படங்களில் பெரிய அளவுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது, ஆனால் இந்த படம் அவருடைய Come back என்றால் அது மிகையல்ல. விவேக்கின் உதவியாளராக நடித்துள்ள பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பீட்டர் அடிக்கடி அடிக்கும் காமெடி அரங்கில் விசில் சத்தத்தை பறக்கவிடுகிறது. நாயகனின் பாட்டியாக சச்சுவும், அம்மாவாக தோன்றும் நடிகையும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அடிக்கடி ஹீரோவிடம் காதல் வயப்படும் 'கோமாளி' பட புகழ் அனந்தி நடிப்பும் அற்புதம்.  

படத்திற்கு அனிரூத் மட்டும் இன்றி மொத்தம் 8 இசையமைப்பாளர்கள், அனைவரின் இசையும் கலந்து அளவோட அழகாய் ஒலிக்கிறது. ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மற்றும் எடிட்டர் க்ரிபாகரன் நல்ல முறையில் தங்கள் பணியை செய்துள்ளனர். இரண்டாம் பாகத்தில் திரைக்கதை சற்று தொய்வடைவதும், தேவையற்ற சில இரட்டை அர்த்த வசனங்களையும் தவிர படத்தில் குறைகூற பெரிதாய் ஒன்றும் இல்லை என்பதே படத்தின் வெற்றி. இறுதியில் விவேக்கிற்கு 'உயிரை' தந்து உதவிய நாயகனுக்கு கடைசியாக என்ன நடந்தது என்பதை சொல்லும் கதையே இந்த 'தாராள பிரபு'..

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com