முகப்புவிமர்சனம்

"பொன்மகள் வந்தாள்"- திரைப்பட விமர்சனம்!

  | Friday, May 29, 2020

Rating:

  • பிரிவுவகை:
    Legal Drama
  • நடிகர்கள்:
    Jyothika, R Parthieban, K Bhagyaraj, Pratap Pothen, Pandiarajan
  • இயக்குனர்:
    J.J. Fredrick
  • தயாரிப்பாளர்:
    Suriya
  • எழுதியவர்:
    J.J. Fredrick
  • பாடல்கள்:
    Govind Vasantha

ஜோதி. சக்தி ஜோதி. பெயரில் பிரகாசம். இருள் சூழ்ந்த மனம். அவள் ஒரு கொலைகாரி. பிஞ்சுக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரி. அவளின் மன்னிக்க முடியாத குற்றங்கள் வெளிவர வெளிவர, போலீஸ் அவளை நெருங்கியது. சுற்றி வளைத்துக் கைது செய்ய முற்படும்போது அவள் போலீஸைத் தாக்கினாள். தற்காப்புக்காக போலீஸ் அவளை என்கவுன்ட்டர் செய்தது. 

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஊட்டியில் நடந்த ஒரு முக்கிய வழக்கின் சாரம்சம் இது. ஜோதி மீது வெறுப்புக் கோட்டை வலுவாக கட்டப்பட்டது. எல்லா கதைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இந்த வழக்கில் வெளியில் சொல்லப்பட்ட கதையை முற்றிலும் மறுதலிக்கும் கதை வெண்பாவிடம் (ஜோதிகா) இருந்தது. அதுவே உண்மைக் கதை. 15 ஆண்டுகளாக அவள் கதையை… அந்த உண்மைக்கு அணு அணுவாக ஆதாரங்கள் திரட்டினாள். ஒரு வழக்கறிஞராக மீண்டும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்தாள். 

ஜோதிக்கும் வெண்பாவிற்கும் எதிரானவர்கள், தமிழகத்தின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராஜரத்தினத்தை (பார்த்திபன்) வெண்பாவிற்கு எதிராக களமிறக்குகிறார்கள். இருவருக்கும் இடையில் பெரும் வாதப் போர் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார்? வெண்பாவிற்கு நீதி கிடைத்ததா? ஜோதியின் சத்தியத்தை உலம் அறிந்ததா? பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் சாரம் இதுதான். 

சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசும் கதைக்களத்தைக் கருவாக எடுத்துள்ளது பொன்மகள் வந்தாள். பாதிக்கப்பட்ட பிஞ்சுகளுக்கு கோர்ட் மூலம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. படத்தில் பல இடங்களில் ‘நீதிமன்றத்தில் உண்மைக்கு மதிப்பில்லை. ஆதாரங்களுக்குத்தான் முக்கியத்தும் கொடுக்கப்படும்’ என்று பல்வேறு கட்டங்களில் சொல்லப்படுகின்றன. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய இடங்களில் வெண்பா முன்வைப்பது ஆதாரங்களை அல்ல. தன் மனக் குமுறல்களை. 15 ஆண்டுகளாக தன் மனதிற்குள் ஆழப் புதைத்து வைத்திருந்த ஆதங்கத்தை. ஏன் என்றால் வெண்பாவும் வழக்கில் சம்பந்தப்பட்ட அதே கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். 

மிக உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தைக் கையாளும்போது, உணர்ச்சிகளை மட்டும் இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக் பெரும்பாலான இடங்களில் கொட்டுவது, எடுத்துக் கொண்ட முக்கிய பிரச்னையை டீல் செய்வதில் நியாயம் சேர்க்கவில்லை. பின்னணி இசையும் அதற்குப் பெருமளவு கை கொடுக்கவில்லை. 

சினிமாவில் காட்டும் நீதிமன்றங்களை பகடி செய்யும் திரைப்படத்தில், வெண்பா கொந்தளிப்பில் பேசும் பக்கம் பக்கமான கிளைமாக்ஸ் வசனங்கள் தமிழ் சினிமாவின் க்ளீஷேக்களின் தொடர்ச்சி. வழக்கின் முக்கிய குற்றவாளியான வரதராஜனுக்கு (தியாகராஜன்) எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது, எப்படி அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது என்பது கதை எழுதியவர்களுக்கே வெளிச்சம். 

படத்தில் தான் என்ட்ரி கொடுத்ததிலிருந்து கிளைமாக்ஸின் கடைசி காட்சி வரை, கிரிமினல் வழக்கறிஞராக அல்ல, கிரிமினலாகவே இருக்கும் ராஜரத்தினம், எப்படி கடைசி நிமிடத்தில் கட்சி மாறுகிறார் என்பது புரியாத புதிர். மற்றபடி பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பார்த்திபன், படத்தின் பெரிய பலம். 

‘பெட்டிஷன்’ பெத்துராஜ் என்று பில்டப்பாக அறிமுகமாகும் பாக்கிராஜுக்கு வலுவான கேரக்டர் இல்லை. பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கு சில காட்சிகள் மட்டுமே வருகிறார்கள். ‘பிஜிலி’ ரமேஷ் எதற்கு கோர்ட்டின் ஒரு மூளையில் இரண்டு சீன்களில் மட்டும் நிற்கிறார் என்று தெரியவில்லை. 

’36 வயதினிலே’ மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து வலுவான கதையம்சமுள்ள பல படங்களில் செறிவான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் படத்திலும் தன் பங்கை கணகச்சிதமாகவே செய்திருக்கிறார். இன்றைய சூழலில் நாம் சந்தித்து வரும் முக்கியப் பிரச்னையை எடுத்துக் கையாண்ட காரணத்திற்காகவே படக்குழுவினரைப் பாராட்டி ஆக வேண்டும். 

கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படம் என்ற பெயர் ‘பொன்மகள் வந்தாள்’-க்கு நல்ல விளம்பரமாக இருந்தது.  ஆனால் வலுவான திரைக்கதை இல்லாத காரணத்தால் அந்த விளம்பரங்களுக்கு உரிய படமா இது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘பொன்மகள் வந்தாள்’ மீட்பவராக இருப்பாள் என நினைத்தால், மீட்கப்பட வேண்டியவளாக ஏமாற்றுகிறாள். 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com