முகப்புவிமர்சனம்

பெண்குயின் - சினிமா விமர்சனம்!

  | Friday, June 19, 2020

Rating:

பெண்குயின் - சினிமா விமர்சனம்!
 • பிரிவுவகை:
  Suspense Drama
 • நடிகர்கள்:
  Keerthy Suresh, Lingaa , Madhampatty Rangaraj
 • இயக்குனர்:
  Eashvar Karthic
 • தயாரிப்பாளர்:
  Karthik Subbaraj
 • எழுதியவர்:
  Eashvar Karthic
 • பாடல்கள்:
  Santhosh Narayanan

2018 ஆம் ஆண்டு ‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பெண்குயின்’ மூலம் மீண்டும் களம் கண்டுள்ளார். தன்னந்தனி ஆளாக படத்தை முழுவதுமாகத் தன் தோள்களில் சுமந்துள்ளார் கீர்த்தி. ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக பெண்குயின்-ஐ பார்க்க உங்கள் வாழ்க்கையின் 2 மணி நேரம் மற்றும் 12 நிமிடங்களை செலவிடலாமா?

ரிதம்-க்கு (கீர்த்தி சுரேஷ்) முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தையான அஜய் கடத்தப்படுகிறார். 
6 ஆண்டுகளாக குழந்தை கிடைக்கவில்லை. ஆனால் தன் தேடும் முயற்சியை ரிதம் கைவிடவில்லை. பல ஆண்டுகளாகத் தன் குழந்தை குறித்து வந்த தகவல்கள் கெட்ட கனவாக வந்து அவளை பயமுறுத்துகிறன.
 6 ஆண்டுகளில் ரிதமின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள். இரண்டாவது திருமணம். அந்த உறவில் பிறக்க இருக்கும் குழந்தை என வாழ்க்கை திசை மாறுகிறது. இப்படிப்பட்ட சமயத்தில்தான் அஜய் மீண்டும் கிடைக்கிறான். ஆனால் 6 ஆண்டு பிரிவு, தாயிடமிருந்து கிடைக்காத பாசம், தூக்கம் தொலைத்த இரவுகள், பசி மறந்த வயிறு, பழகத் தெரியாத உள்ளம் என அஜய்க்கு ஏகப்பட்ட உளவியல் சிக்கல்கள். அத்தனைக்குமான விடை அஜய்யை கடத்தியவனிடத்தில்தான் இருக்கிறது என்று முடிவு செய்கிறாள் ரிதம். அவனைத் தேடி கண்டுபிடிக்க, முற்கள் அடர்ந்த காட்டில் அடி மேல் அடியெடுத்து வைக்கும் பயணம்தான் பெண்குயின்.

அறிமுக இயக்குநரான ஈஸ்வர் கார்த்திக் ஒரு சஸ்பென்ஸ் கலந்த டிராமா படத்தை செறிவாக எடுக்க முயன்றுள்ளார். மேஜிக்கை நம்பாமல் லாஜிக்படிதான் படம் எடுப்பேன் என்று இயக்குநர் நினைத்தது சரி. ஆனால் பல இடங்களில் லாஜிக் மீறல் தெரிவது திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம்.

சஸ்பென்ஸ் படத்திற்கு ஏற்ற வலுவான பின்னணி இசையை சந்தோஷ் நாரயணன் கொடுக்கத் தவறிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. எடிட்டிங், ஒளிப்பதிவில் பிசிறு இல்லாமல் இருப்பது படத்தின் பலம். படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் யாருக்கும் வலுவான காட்சிகள் இல்லை. படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரங்களுக்கும் கிளைமாக்ஸ் தவிர பெரிதாக வேலை இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் கீர்த்தி சுரேஷ்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சஸ்பென்ஸ் படத்தில் காட்சிகள் மூலம் பயத்தையும், மனித மன உணர்வுகளையும் ஆடியன்ஸுக்கு அதிகமாக கடத்த முடியும். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் பக்கம் பக்கமாக வசனம் பேசியே அதை சாதிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்குயினும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகத்திலேயே பெண்குயின்தான் இறக்கை இருந்தும் பறக்க முடியாத ஒரே பறவை இனம் என்பார்கள். ஆனால் திரையில் வந்த இந்த ‘பெண்குயின்’ ஆவது பறக்கும் என்று ஆசைப்பட்டால், தத்தி தத்திதான் நடக்கிறது

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com