முகப்புவிமர்சனம்

'குப்பத்து ராஜா' கற்பனையில் உருவான கனவு - விமர்சனம் - 'Kuppathu Raja' Movie Review

  | Saturday, April 06, 2019

Rating:

'குப்பத்து ராஜா' கற்பனையில் உருவான கனவு - விமர்சனம் - 'Kuppathu Raja' Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  ஜி.வி.பிரகாஷ், பூன பஜ்வா, பல்லக் லால்வானி,
 • இயக்குனர்:
  பாப பாஸ்கர்
 • பாடல்கள்:
  ஜி.வி.பிரகாஷ்

உழைக்கும் மக்கள் வாழும் வட சென்னையின் ஒரு பகுதியில் வாழ்ந்து வாழ்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதே பகுதியில் வாழும் பாத்திபன் அந்த பகுதியில் வாழும் மக்களின் மதிக்கத்தக்க ஒரு மனிதராக இருக்கிறார். அந்த பகுதி மக்களுக்கு உதவிகள் செய்து, இந்த மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்பது என ராஜாவாக இருக்கிறார். பார்திபனும் ஜி.வி.பிரகாஷின் தந்தை எம். எஸ் பாஸ்கரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இருக்கிறார்கள். இவர்களை பாண்டவர்கள் என்று மக்கள் அழைப்பார்கள்.

இவர்களுக்கும் ஜி.வி.பிரகாஷின் அணிக்கும் எப்போது ஆகாது முறைத்துக்கொண்டே இருப்பார்கள். இனிமேல் இந்த ஏரியாவில் நாங்கதான் என்று ஜி.வி. பிரகாஷ் அந்த ஏரியாவில் இடம் பிடிக்க நினைக்கிறார். அதனால் இவர்களுக்குள் நடக்கும் மோதல்களை காமெடியாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.

கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் மீதிக்கதை.

நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் வடசென்னை இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அதகளப்படுத்தியிருக்கிறார். சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்று கவனம் பெறுகிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். இந்தளவிற்கு சித்தரித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. நல்ல கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. படைப்பாளிக்கு அந்த பொருப்பு மிக அவசியம்.

ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வியலை மிகைமைப்படுத்தி காட்டியிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில். பாடல்கள் ரசனையாக இருக்கிறது.

மொத்தத்தில் எங்க ராஜா நீங்க இல்லை என்று உழைக்கும் மக்கள் சொல்லும் அளவிற்கு கற்பனையை திணித்திருக்கிறார் இயக்குநர். உழைக்கும் மக்கள் வாழும் பதியில் இருந்து வரும் ஒரு பெரும் சமூகம் ஆகச்சிறந்த மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்கள். பல்வேறு துறைகளில் தங்களுக்கென் தனி இடத்தை அவர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் பொருளாரம் மேம்படாமல் இருக்கலாம் ஆனால் சுய ஒழுக்கத்திலும் மற்றவர்கள் உதாரணமாக இருப்பதிலும் வடசென்னை மக்கள் வாழ்கை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் பார்க்கும் போது ஆதீத கர்ப்பனையில் பெரும் மக்களின் வாழ்வியலை சித்திரிக்கிறது இப்படம். மொத்தத்தில் “குப்பத்து ராஜா” கற்பனையில் உருவான கனவு.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com