முகப்புவிமர்சனம்

காதலும் கொலையும் கலந்த மிஷ்கினின் ‘சைக்கோ’ - விமர்சனம்

  | Saturday, January 25, 2020

Rating:

காதலும் கொலையும் கலந்த மிஷ்கினின் ‘சைக்கோ’ - விமர்சனம்
 • பிரிவுவகை:
  சைக்கோ த்ரில்லர்
 • நடிகர்கள்:
  உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம்
 • இயக்குனர்:
  மிஷ்கின்
 • பாடல்கள்:
  இளையராஜா

சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிய தனது காதலியை மீட்க , பார்வையற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகளே ‘சைக்கோ’ படம்.

படத்தின் முதல் காட்சியிலேயே கொலைகாரன் யார் என்பது தெரிந்து விடுகிறது.. பெண்களை கடத்தி அவர்களின் தலையை வெட்டி, உடலை யாருமில்லாத இடத்தில் போட்டுவிட்டு செல்கிறான் கொலைகாரன். இந்த தொடர் கொலைகாரனை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் ராம் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளனர். படத்தின் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்துள்ளார். வானொலியில் தொகுப்பாளரான ஆதிதியை பார்வையற்றவரான உதயநிதி காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்பதாகக் கூறி, அவரை ஒரு ஆளில்லா ரயில் நிலையத்திற்கு வர சொல்கிறார் கதாநாயகி அதிதி. இருவரும் சந்திக்கும் வேளையில் கொலைகாரன் கதாநாயகியான அதிதியை கடத்தி விடுகிறான். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிய தனது காதலியை பார்வையற்ற அந்த காதலன் மீட்டார? இல்லையா?, அந்த சைக்கோ கொலைகாரன் என்ன ஆகிறான் என்பதை சஸ்பென்ஸ்டனும், பயத்துடனும் சொல்லி இருக்கும் படம் தான் ‘சைக்கோ’. 

படத்தின் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகி அதிதி ராவ் கொலைகாரனிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், தைரியமாக கொலைகாரனிடம் பேசும் காட்சியிலும், இறுதியாக கொலைகாரனுக்கும் இரக்கம் காட்டும் போதும் தனது முக பாவனைகளுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான சைக்கோ கொலைகாரனாக வரும் ராஜ் குமார் பிச்சுமணி சைக்கோவாகவே வாழந்து நம்மை பயமுறுத்தியுள்ளார். கொலைகாரனை கண்டுபிடிக்க உதயநிதிக்கு உதவியாக வரும் நித்யா மேனன் வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பில் அசத்தியுள்ளார். 

உதயநிதியுடன் வரும் சிங்கம் புலி, போலீஸாக வரும் ஆடுகளம் நரேன், இயக்குனர் ராம், நித்யா மேனனின் அம்மாவாக அவரும் ரேணுகா என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்துவிட்டு செல்கின்றனர். 

படத்தின் மிகப்பெரிய பிளஸ் இசைஞானியின் இசை தான். மூன்று பாடல்களோடு பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார் இளையராஜா. மேலும் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம்.  நம்ப முடியாத சில காட்சிகள், அழுத்தம் இல்லாத சைக்கோ கொலைகாரனின் பிளாஷ் பேக் இவை இரண்டும் படத்திற்கு சறுக்கல். எனினும் இயக்குனர் மிஷ்கினின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தராது. மொத்தத்தில் இந்த சைக்கோ, தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு சைக்கோ திரில்லர் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com