முகப்புவிமர்சனம்

தமிழ் சினிமாவின் அறிய படைப்பு பேரன்பு - 'பேரன்பு' விமர்சனம் - "Peranbu" Movie Review

  | Saturday, February 02, 2019

Rating:

தமிழ் சினிமாவின் அறிய படைப்பு பேரன்பு - 'பேரன்பு' விமர்சனம் -
 • பிரிவுவகை:
  ஃபேமிலி டிராமா
 • நடிகர்கள்:
  மம்மூட்டி, சாதனா, அஞ்சலி,அஞ்சலி அமீர்
 • இயக்குனர்:
  ராம்
 • தயாரிப்பாளர்:
  பி.எல்.தேனப்பன்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

இயக்குனர் ராமின் இயக்கம், மம்மூட்டியின் ரீஎன்ட்ரி, ஃபெஸ்டிவல் விருதுகள் என சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வெளிவந்திருக்கும் படம் "பேரன்பு".

ராமின் படங்கள் அனைத்தும் ஒரு தாக்கத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் நான் அன்றாடம் பார்த்து, கடந்து போகும் ஒரு வாழ்க்கையின் ஆழத்தை அப்படியே திரையில் காட்டிவதில் அவர் வல்லவர் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த படத்திலும் மூளை முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, ஒரு பெண்ணாக மாறும் காலங்களுக்குள் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனையும், அதை அருகே இருந்து அவளை வழிநடத்த துடிக்கும் தந்தைக்குமான உணர்வு போராட்டத்தை மிக எதார்த்தமாக, அனைவரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் அமுதன் தன் சொந்த பிரச்சனைக்காக திடீரென ஊர் திரும்புகிறான்.வந்த இடத்தில் மனைவியின் பிரிவு, குழந்தையின் வாதம், குடும்பத்தின் புறக்கணிப்பு என உணர்வு போராட்டத்தில் சிக்கி, யாரும் இல்லாத ஒரு இடத்திற்கு இடம் பெயருகிறான். தன் மகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி அவளது சிரிப்பில் மகிழ்ச்சி காணும் வாழ்க்கையை வாழ தொடங்குகிறான். காலம் கடக்க பெண் குழந்தைக்கு ஒரு தந்தை, தாயாக முடியாது என உணர்ந்து, தன் மகளை பார்த்துக்கொள்ள விஜயலட்சுமி என்னும் பெண்ணை வேளையில் அமர்த்துகிறான். அமுதனுக்கும், விஜயலட்சுமிக்கும் காதல் உண்டாகி, திருமணமும் நடக்கிறது. அதன் பின் தான் விஜயலட்சுமி மூலம் தனக்கு விரிக்கப்பட்ட துரோக வலையை அறிந்து, அதில் சிக்கி அனைவரையும் பிரிந்து, தன் பாப்பாவோடு நகரத்திற்கு வருகிறான். நகர வாழ்க்கையின் எதார்த்தம், தன் வேலையை கூட செய்ய முடியாத தன் மகளுக்கு அவள் வயதிற்கான எதார்த்தங்களை தூண்டுகிறது. அதே நேரத்தில் அவனுக்கு மீரா எனும் திருநங்கையின் நட்பும் கிடைக்கிறது. 13 வயது பெண்ணின் உடல் மற்றும் உள்ளத்தின் இயற்கை பிரச்சனைகளை தீர்த்துவைக்க அமுதன் முடிவு செய்கிறான். அனைவருக்கும் சாதாரணமாக கிடைக்கும் தேவைகள், அதற்குள் இருக்கும் வன்முறைகளை அழகாகவும், ஆழமாகவும், நேர்த்தியாக சொல்லியிருக்கும் படம் தான் "பேரன்பு". இந்த படத்தை ராமை தவிர வேற யாராலும் இவ்வளவு அழகாக சொல்லியிருக்க முடியாது. அது படம் பார்க்கும் போது புரியும்.

மொத்தம் 12 அத்தியாகமாக, இயற்கையோடு நெருக்கமாக, இயற்கையின் குணங்களோடு கதை சொல்லியிருப்பது படம் பார்க்கும் நமக்கு ஒரு கவிதை படிக்கும் மனநிலையை தருகிறது. மம்மூட்டி அறிமுகம் ஆகும் போது அவருக்கு இருக்கும் தாடி, அவர் தன் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் காலங்களில் இருக்கும் தாடி, மகளுக்குள் நடக்கும் இயற்கை மாற்றங்களை கண்டு பரிதவிக்கும் காலங்களில் இருக்கும் தாடி, மரணத்தின் உச்சத்தை தொடும் போது இருக்கும் தாடி, புது வாழ்க்கையை தொடங்கும் போது அவரிடம் மரணிக்கும் தாடியென காலமாற்றங்களை கதாபாத்திரத்தின் உடல் மொழியிலேயே சொல்லியிருப்பது அருமை. அமுதன், பாப்பா, விஜயலட்சுமி, மீரா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களோடு இணைத்துக்கொள்ளும், தங்களாக உருவாக படித்து கொள்ளும் ஒரு படமே உலக சினிமாவாகிறது. அந்த வகையில் 'பேரன்பு" தமிழில் வந்திருக்கும் ஒரு உலக சினிமா என பெருமையாக கூறிக்கொள்ளலாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தான். ராமின் எழுத்துக்களை யுவன், தேனி ஈஸ்வர் இருவரும் சேர்ந்து கவிதையாக திரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். பாப்பாவாக நடித்திருக்கும் சாதனா நிச்சயமாக பல விருதுகளை வாங்கி குவிப்பார். ஏனென்றால் இந்த படத்தில் அவரது நடிப்பை விட, அதற்காக அவர் உழைத்த உடல் உழைப்பு அதிகம். வழக்கம் போல், ராமின் படங்களில் வழக்கத்துக்கு மாறான அஞ்சலி. இதிலும் அவரது நடிப்பு அவ்வளவு எதார்த்தம். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அஞ்சலி அமீர் எனும் திருநங்கையின் கதாபாத்திரமும், நடிப்பும் படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கிறது. இவர்களின் மொத்த உழைப்பையும், மம்மூட்டி தன் எதார்த்த நடிப்பால் ஓரம் கட்டுகிறார் என்றால் மிகையாகாது. அவரது திரை பயணத்தில் "பேரன்பு' மிக முக்கிய படம்.

ஒரு வன்முறையை விட மோசமானது மனிதனின் உணர்வுகள். அப்படியான ஒரு வன்முறையை கவிதையாகவும், மென்மையாகவும் கொடுத்தது தன் ராமின் பேரன்பின் சிறப்பு. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் "பேரன்பு"

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்