முகப்புவிமர்சனம்

முரட்டு சிங்கிள்ஸ் எதிர்கொல்லும் முக்கிய பிரச்னை - ‘பப்பி’ விமர்சனம்!

  | Saturday, October 12, 2019

Rating:

முரட்டு சிங்கிள்ஸ் எதிர்கொல்லும் முக்கிய பிரச்னை - ‘பப்பி’ விமர்சனம்!
 • பிரிவுவகை:
  லவ் டிராமா
 • நடிகர்கள்:
  வருண், சம்யுக்தா,யோகிபாபு
 • இயக்குனர்:
  நட்டு தேவ்
 • தயாரிப்பாளர்:
  ஐசரி கணேஷ்
 • பாடல்கள்:
  தரண் குமார்

கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘பப்பி’.
 
முரட்டு சிங்கிளான கல்லூரி மாணவன் ஒருவனுக்கு நாயகியுடன் காதல் ஏற்படுகிறது. காதல் வளர்ந்து ஒரு கட்டத்தில் நாயகியுடன் நெருங்கி பழகி கலவி கொள்கிறார். சில நாட்கள் கழித்து நாயகி கற்பமாக இருப்பதாக சந்தேகிக்கிறார். திருமணத்திற்கு முன்பே கர்பம் ஆனால் வீட்டில் பிரச்னையாகும் என்று நினைக்கும் நாயகனும் நாயகியும் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
 
பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவனாக வருண் நடித்திருக்கிறார். முரட்டு சிங்கிளான இவர் வீட்டிற்கு, மதுரையில் இருந்து சம்யுக்தா குடும்பம் குடிபெயர்கிறார்கள். நண்பர்களாகும் இவர்கள் நாட்கள் செல்ல காதலிக்கிறார்கள். நாயகியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் கலவியில் ஈடுபட்டு சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். இந்த பிரச்னையில் இருவருக்கும் சண்டை வந்து பிரிகிறார்கள். பின் இவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளியாக பப்பி என்கிற நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இவர்கள் எப்படி இணைகிறார்கள். இந்த படத்தில்  பப்பி மற்றும் யோகி பாபுவின் பங்கு என்ன என்பதை விளக்குகிறது திரைக்கதை.
 
தான் கல்லூரியில் படித்தபோது தன்னை சுற்றி நடந்த சில ஸ்வாரஸ்யமான சம்பவங்களுடன் தனது கற்பனையும் சேர்த்து கலவையாக்கி இயக்குநர் நட்டு தேவ் இயக்கி இருக்கும் படமே பப்பி. நவீனமயமான இயந்திர உலகத்தில் சமகால இளைஞர்கள் சிலர் காதலை எப்படி அனுகிறார்கள். ஆண் பெண் உறவு குறித்த பார்வை எப்படி இருக்கிறது. இளம் வயதில் ஏற்படும் பாலியல் உணர்வு குறித்த விஷயங்களை பற்றி விமர்சிக்கும் கதைகளத்தை கையில் எடுத்து படைப்பாக்கி இருக்கிறார் இயக்குநர்.
 
நாயகனாக நடித்திருக்கும் வருண் சமகால இளைஞர் கதாபாத்திரத்தில் துல்லளாக நடித்து கவனம் பெறுகிறார். அதே சமயம் சில இடங்களில் அவர் தடுமாறுவதையும் மறுபதற்கில்லை. அம்மாவிடமும், யோகி பாபுவுடனும் கோபப்படும் சில காட்சிகளில் அவரது நடிப்பு மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. எதார்த்தத்திலிருந்து சற்று விலகி நடிக்க முயற்சி செய்திருப்பது போல் இருந்தது. மற்ற இடங்களில் தனது இயல்பான நடிப்பில் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
 
நாயகனுடன் கடைசி வரை பயணிக்கும் யோகி பாபு எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பில் நம்மை சிரிக்க வைத்து மகிழ்விக்கிறார். கூடுதலாக இந்த படத்தில் கால் பந்தாட்டம் விளையாடி அசத்தி இருக்கிறார். எதார்த்தமான பேச்சும், ரன்னிங் கமெண்டுகளும் சிரிக்க வைக்கின்றன.
 
ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டாவது படத்தில் நடித்துள்ள சம்யுக்தா. மதுரையில் இருந்து சென்னை வரும் உணவு பிரியராக இருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்புமூலம் எளிமையாக நம் மனதில் பதிகிறார். காதல், ஊடல், கூடல், கோபம் என எதார்த்த நடிப்பில் படத்திற்கு ஸ்கோர் செய்து பாராட்டுகளை பெறுகிறார். தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்ட் வருவார் என்பதால் மாற்று கருத்து இல்லை.
 
இப்படத்தின் டிரெய்லரில் காண்பித்த வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்படத்தில் கவர்ச்சியும், இரட்டை வசனங்களாலும் நிரம்பி இருக்கும் என்கிற யூகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறது படம். படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளில் வசனங்கள் முகம் சுளிக்க வைத்தாலும் சமகால இளைஞர்கள் சிலரின் ஏக்கம் இதுவே என்பதை பிரதிபலிக்கிறது. பிரச்னையில் இருந்து மீண்டு வர நாயகியும் நாயகனும் போராடும் காட்சிகள் இரண்டாம் பாதி பிரதிபலிக்கிறது. இவர்கள் இருவரையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பப்பி என்கிற நாய் படத்தின் இன்னொரு நாயகன். இப்படியான ஒரு படத்திற்கு ஏன் பப்பி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் நிச்சயமாக படம் பார்த்து வெளியில் வரும்போது அதற்கான நியாயத்தை நிச்சயம் அறிந்துக்கொள்வீர்கள்.
 
படத்திற்கு ஒலி,ஒளி கூடுதல் பலம். பின்னணி இசையில் சோகத்தையும் கோபத்தையும் சேர்த்தே கடத்துகிறார் இசை அமைப்பாளர். அவருக்கும் வாழ்த்துகள். தன்னுடைய முதல் படத்திற்கு எந்த அளவிற்கு அக்கரை செலுத்த வேண்டுமே அந்த அளவிற்கு கவனமாக கையாண்டு இருக்கிறார் இயக்குநர். மொத்தத்தில் முரட்டு சிங்கிள்ஸ் எதிர்கொல்லும் பிரச்னையைப் பேசும் படம் ‘பப்பி’.
 

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
Listen to the latest songs, only on JioSaavn.com