முகப்புவிமர்சனம்

இன்றைய சூழலில் தேவையான படைப்பு ராட்சசி – ராட்சசி விமர்சனம்

  | Friday, July 05, 2019

Rating:

இன்றைய சூழலில் தேவையான படைப்பு ராட்சசி – ராட்சசி விமர்சனம்
 • பிரிவுவகை:
  சோஷியல் டிராமா
 • நடிகர்கள்:
  ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன்
 • இயக்குனர்:
  கௌதம் ராஜ்
 • தயாரிப்பாளர்:
  எஸ்.ஆர்.பிரகாஷ் ராஜ, எஸ்.ஆர்.பிரபு
 • பாடல்கள்:
  ஷான் ரோல்டண்

அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் “ராட்சசி”. நடிகை ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் அரசு பள்ளியின் வளர்ச்சி குறித்தும் ஆழமான கருத்துகளையும் உரையாடி இருக்கிறது.
 
புதூர் கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளி ஒன்றில் முறையாக வகுப்புகள் நடப்பதில்லை. ஆசிரியர்கள் தங்களது பணிகளை சரியாக செய்வதில்லை. மாணவ மாணவிகள் கேட்பாறற்று கிடக்கிறார்கள். இப்படி இயங்கிக்கொண்டிருக்கும் பள்ளி மீது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ப்த்தி இருக்கிறது. இப்படியான ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணிக்கு வருகிறார் ஜோதிகா. தலைமை ஏற்ற பின் பள்ளி எப்படி சீர் அடைகிறது அதற்கு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
 
  சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012ல்  வெளியான ‘சாட்டை’ படம் நேர்மையான ஒரு ஆசிரியரால்  பள்ளியில் ஏற்படும் மாற்றம் குறித்து அழகாக பதிவு செய்திருந்தது. பலர் இந்த படத்தைப்போலவே ‘ராட்சசி’ படமும் இருக்கிறது என்று கருத்து கூறுகிறார்கள். அதில் தவறேதும் இல்லை, இன்றைய காலச் சூழலில் உலகமயமாக்களுக்கு பிறகு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வெளிப்படையாகவே நம்மால் பார்க்க முடிகிறது. பொது மக்கள் மத்தியில் அரசு பள்ளி குறித்த பார்வை எதிர்மறையாக இருப்பதையும் நம்மால் உணர முடிகிறது. இப்படியான சூழலில் அரசு பள்ளி குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தேவை படைப்பாளிகளுக்கும் உண்டு என்பதை இப்படம் காட்டுகிறது.
 
 தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாம் பார்த்து வருகிறோம். இவை ஒரு பக்கம் இருக்க அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள், அவர்கள் பொறுப்புணர்வோடு இருக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டிய தேவையையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்யவும் இந்த படம் அடிதளம் அமைத்திருக்கிறது.
 
ஒட்டுமொத்த ஆசிரியர்களும் தங்ளது பணியை சரியாக செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஈடுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்கள் பலர் இந்த சமூகத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் படம் பதிவு செய்திருக்கிறது.
 
 நாம் படித்த பள்ளிக்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும் என்கிற வசனம் இடம் பெறுகிறது. இதனை அடுத்து பொது மக்கள் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கு  தங்களால் முடிந்த நிதி கொடுக்கிறார்கள். அரசு தரப்பில் இருந்து பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி என்னவாகிறது. ஒதுக்கப்படும் நிதி ஏன் அரசு பள்ளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்பதைப்பற்றியெல்லாம் இயக்குநர் யோசிக்க மறந்திருக்கிறாரோ என்று தோன்றியது. ஏனெனில் மக்களின் வரிப்பணம் அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டும் அது குறித்த எந்த கேள்வியையும் முன்வைக்காமல் மீண்டும் மக்களிடம் பணம் திரட்டி பள்ளியை சீரமைக்கும் காட்சியை பார்க்கும் போது அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை யார் எடுத்தால் என்ன நாம் பணம் திரட்டி நாமே பள்ளியை சரிசெய்துகொள்ளலாம் என்பது அரசு ஒதுக்கும் நிதிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆதரவாக இருக்காதா என்கிற கேள்வி எழுகிறது.
 
 பெரும்பாலானா பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில்லை, கௌரவத்திற்காகவே தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பிள்ளைகளுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் இடம் வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிற  அடிப்படை கேள்வியை எழுப்புகிறது இப்படம். அரசு பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிற முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
 
 கிராமபுற பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி எவ்வாறு செயல்படுகிறது அதை ஜோதிகா கையாளும் விதம் பாராட்டுக்குறியது. அதே சமயம் ஆசிரியர்களை பார்த்து அவர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். “பாட புத்தகத்தில் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என்பதை ஆசிரியர்களான நீங்கள் படிக்கவில்லையா” என்கிறார். அதே சமயம் தீண்டாமைக்கு ஆணிவேறாக இருக்கும் சாதியை கேள்வி கேட்கும் ஒரு பாடதிட்டம்கூட நமது பள்ளிகளில் இல்லையே என்கிற கேள்வியை அவர் ஏன் எந்த இடத்திலும் முன்வைக்கவில்லை என்கிற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.
 
மிடுக்கான தோற்றத்தில் சிறந்த ஆசிரியராக வரும் ஜோதிகா படம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். ஜோதிகாவைச் சுற்றியோ கதைகளம் நகர்ந்தாலும் தேவையான விஷயங்களை ஆழமாக பதிவு செய்து பாராட்டுகளை பெறுகிறார்.
 
தனியார் பள்ளி நிர்வாகியாக வரும் ஹரிஸ் பெராடியின் வில்லத்தனம் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆசிரியராக வரும் பூர்ணிமா பாக்யராஜ், உடற்பயிற்சி ஆசிரியராக வரும் சத்யன் உள்ளிட்டோர் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகைபடுத்தாமல் நடித்து கொடுத்திருக்கிறார்கள்
ஷான் ரோல்டண் இசையும், கோகுல் பெனாயின் ஒளிப்பதியும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் சரியான நேரத்தில் தேவையான படைப்பாக ராட்சசி அமைந்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்