முகப்புவிமர்சனம்

சமூகம் பேச மறுக்கும் பிரச்சனையை உடைத்து பேசும் படம் - 'சர்வம் தாளமயம்' விமர்சனம்

  | Wednesday, January 30, 2019

Rating:

சமூகம் பேச மறுக்கும் பிரச்சனையை உடைத்து பேசும் படம் - 'சர்வம் தாளமயம்' விமர்சனம்
 • பிரிவுவகை:
  சோஷியல் ட்ராமா
 • நடிகர்கள்:
  ஜி.வி. பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்னா பாலமுரளி, குமரவேல்
 • இயக்குனர்:
  ராஜீவ் மேனன்
 • தயாரிப்பாளர்:
  லதா மேனன்
 • பாடல்கள்:
  ஏ.ஆர்.ரகுமான்

கர்நாடக இசை கருவியான மிருதங்கம் செய்பவராக வருகிறார் ஜான்சன் (குமரவேல்). இவரது மகன் பீட்டர் ஜான்சன்(ஜி.வி.பிரகாஷ்).  தீவிர விஜய் ரசிகராக கட்டுக்கடங்கா காளையாக வலம் வருகிறார்.  இவரது குடும்பமோ இவர் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறது.

ஆனால் பீட்டரோ விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதால் படிப்பில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக ரசிகர் மன்றத்தில் ரத்ததானம் செய்வது, விஜய்படம் வெளிவந்தால் கொண்டாடுவது என தேர்வில் தோல்வி அடைகிறார்.

தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னுடைய அப்பா செய்யும் குலத்தொழிலான தாளக்கருவி செய்யும் வேலையை அப்பாவிடம் கற்றுக்கொள்கிறார். தன் அப்பாவிடம் தாளக்கருவியை வாங்கும் வாடிக்கையாளராக இருக்கிறார் கர்நாடிக் இசையில் பல விருதுகளை பெற்ற மூத்த இசைக் கலைஞர் வேம்பு ஐயர்(நெடுமுடி வேணு).

ஜான்சன் புதிதாக செய்த தாளக்கருவியை வேம்பு ஐயரிடம் கொடுத்துவிட்டு வருகிறார்.  அன்று மாலை வேம்பு ஐயர் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்கிறார்.  அப்போது அவரது உதவியாளராக வரும் மணி (வினித்) தாளக்கருவியை கீழே போட்டுவிடுகிறார். பழுதாகும் தாளக்கருவியை வைத்து விட்டு ஜான்சனிடம் தொலை பேசியில் வேறு தாளக்கருவி வேண்டும் நிகழ்ச்சிக்கு இன்னும் நேரம் இருக்கிறது, யாரிடமாவது கொடுத்துவிடு என்கிறார். ஜான்சனோ தனது மகன் பீட்டரிடம் கொடுத்துவிடுகிறார்.

கர்நாடிக் சபைக்கு வந்து தாளக்கருவியை கொடுக்கும் பீட்டர் அங்கேயே அமர்ந்து வேம்பு ஐயர் வாசிப்பதை பார்த்து, அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை கண்டு வியந்து போகிறான். தானும் மிருதங்கம் வாசித்து வேம்பு ஐயர் மாதிரி ஆக வேண்டும் என விருப்பப்படுகிறான்.  அதற்காக அவர் வேம்பு ஐயரிடம் கர்நாடிக் இசையை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான்.

பீட்டர் மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொண்டு பேரும் புகழும் அடைகிறானா, கிருஸ்துவ மதத்தில் பிறந்தவன் கர்நாடிக் இசையை கற்றுக்கொண்டானா, மிருதங்கம் கற்றுக்கொள்ள இந்த சமூகத்தில் உள்ள சாதிய பிரச்னையை  எதிர்கொண்டு வெற்றி பெற்றானா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

எந்த இசையும் அனைவருக்கும் பொதுவானது, யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சமூகம் பேச மறுத்துவந்த விவாதத்தை சம்பவங்களாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். யார், யாரிடம் இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், சாதி, மதம் கடந்து ஒருவர் இசையை கற்றுக்கொடுக்க முன்வந்தால் அதை இந்த சாதிய சமூகம் எவ்வாறு முறியடிக்கிறது. கற்றுக்கொள்ளும் பின் தங்கிய ஒரு சமூகத்தை சேர்ந்தவன் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ராஜீவ் மேனன் கேரளத்தை சேர்ந்தவர் என்பதால் படத்தில் கேரள வாசம் வீசுகிறது.

பீட்டரின் காதலியாக வரும் சரா (அபர்னா பாலமுரளி) கேரளத்தை சேர்ந்தவராக இருக்கிறார்.சென்னையில் செவிலியராக பணியாற்றுகிறவரை, விஜய் ரசிகர் மன்றத்தின் மூலமாக ரத்த தானம் செய்யும் போது சந்தித்து விரும்புகிறார் பீட்டர்.  அவர் தன்வாழ்கையில் மிருதங்கம் வாசிப்பதுதான் லட்சியம் என போராடுகிறார்.  பிரச்சனைகளால் துவண்டு போகிறவரை ஊக்கப்படுத்துகிறார் சரா.  உனக்கு எதற்கு குரு இந்த இயற்கைதான் உனக்கு குரு.  இந்த உலகம் உனக்கு இசை கற்றுக்கொடுக்க அழைக்கிறது போய் கற்றுக்கொள் என்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணிக்கிறார் பீட்டர்.  அவர் செல்வதற்கு பணம் கொடுத்து உதவி செய்து அனுப்புகிறார் விஜய் ரசிகர் மன்ற தலைவர்.  பீட்டர் சந்திக்கும் பிரச்சனையின் போதெல்லாம் துணை நிற்கிறார்கள் ரசிகர் மன்ற தோழமைகள்.

மிருதங்கத்தை கற்றுக்கொள்ளும் போராட்டத்தில் ஏற்படும் பிரச்சனையில் சிறிது காலம் சென்னையை விட்டு விலகி இருக்குமாறு காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் தன்னுடைய மகனை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் ஜான்சன்.

இன்னமும் நவீன முறையில் தீண்டாமை இந்த சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பீட்டர் அறிந்துக் கொள்கிறான். இரட்டை குவலை முறை எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது.தாளக்கருவி தயாரிக்கும் சமூகம் எப்படி இருக்கிறது, அவர்களின் வாழ்வியல் எவ்வளவு அழகானது என்பதையும் அறிந்துக் கொள்கிறான்.

இந்த பிரச்சனையில் பீட்டருக்கும் ஜான்சனுக்கும் சண்டை ஏற்படுகிறது.  தாளக்கருவி தயாரிக்கும் நம் சமூகத்தில் யார் இதற்கு முன்பு வாசித்து இருக்கிறார்கள் என்பதை ‘இதுக்கு முன்னாடி எவன் வாசிச்சான் இவன் வாசிக்க‘ என்கிற ஆதங்கம் வெளிபடும் போது இந்த சமூகத்தை நாம் இன்னும் கேள்வி கேட்காமல் வைத்திருப்பதை நினைவு படுத்துகிறது.

இதை பிரதிபளிப்பது போலவே பீட்டர் இசை கற்றுக்கொள்ள தடையை ஏற்படுத்தும் வினித் ‘ பேனா தயாரிக்கிறவன்லாம் கவிஞர் ஆக முடியாது‘ என்று எகத்தாளம் பேசும் வசனங்கள் அனலை கக்குகிறது.

பீட்டர் எங்கேயும் கற்றுக்கொள்ளாமல் இயல்பாக வாசிக்கும் தாள இசையை பார்த்து வேம்பு ஐயர் இவன் யார் என்று கேட்க, வினித் இவன் ஜான்சன் பையன் என்கிறார்.   சிறுத்தை குட்டி, ஓடுவதற்குக் கற்றுக்கொள்ள நரி குருவாக இருக்க வேண்டுமா என்ன என்பது போல் ‘மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா‘ என்கிறார் வேம்பு ஐயர்.  விசில் சத்தம் அரங்கத்தை அலர வைக்கிறது.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக வருகிறார் திவ்யதர்ஷினி.  இவர் வினித்தின் தங்கையாக நடித்திருக்கிறார்.  இருவரும் சேர்ந்து பீட்டரையும், வேம்பு ஐயரையும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதை ஊடகங்கள் செய்யும் அரசியலை கண்முன் நிறுத்துகிறது.  டிடிக்கே உரித்தான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார் டிடி.  இதில் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவராக திகழ்கிறார் ஜான்சன் கதா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் குமரவேல்.  அவ்வளவு இயல்பாக சாதிய சமூகத்தில் தான் சுமந்திருக்கும் வலிகளை சகித்துக்கொண்டு வாழும் உழைப்பாளியாக நெகிழவைக்கிறார்.

சிரிப்புக்கு பெரிதாக இடமில்லை ஒவ்வொரு இடங்களிலும் சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.   ஒவ்வொரு கதாபாத்திரம் நினைவில் நிற்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை நோக்கி செல்லாமல் அத்தனையும் ரசிக்கும் விதமாக இருக்கிறது.  எப்போதும் போல் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.  முடிந்த வரை பேச வேண்டிய ஒன்றை யாருக்கும் வலிகள் இல்லாமல் உடைத்து பேசியிருக்கிறார் இயக்குநர்.

எல்லா இசையும் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் எல்லா இசையும் ஒரு மேடையில் எப்போது இருக்கும் என்பது சமூகத்தின் விடியலை பொருத்தது. சமூக மாற்றமே அதற்கான தீர்வு.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்