முகப்புவிமர்சனம்

“எளிய மக்களின் இயல்பான வாழ்க்கை” தொரட்டி விமர்சனம்!

  | Tuesday, July 30, 2019

Rating:

“எளிய மக்களின் இயல்பான வாழ்க்கை” தொரட்டி விமர்சனம்!
 • பிரிவுவகை:
  ஃபேமிலி டிராமா
 • நடிகர்கள்:
  ஷமன் மித்ரு
 • இயக்குனர்:
  பி. மாரிமுத்து
 • தயாரிப்பாளர்:
  ஷமன் மித்ரு
 • பாடல்கள்:
  ஜித்தின் கே ரோஷனின்

முற்றுலும் புதுமுகங்களை கொண்டு 80களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த எளிய மக்களின் வாழ்வியலை பொதுநீரோட்டத்திற்கு கொண்டு வந்திருக்கும் படம் ‘தொரட்டி’. இயக்குநர் பி. மாரிமுத்து இயக்கி இருக்கும் இப்படம் தென்மாவட்ட மண்வாசனையை இயல்பாக புகுத்துகிறது.

மழை ஏமாற்ற விவசாயம் முடங்கிப்போக ஆடு மேய்ப்பர்கள் ஊர்ஊராக சென்று விளைநிலங்களுக்கு ஆட்டு புழுக்கை உரம் கொடுக்க கடைபோடும் எளிய மக்களின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

ஆடுகளை அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறது கதாநாயகன் மாயனின் (ஷமன் மித்ரு) குடும்பம். தூரத்து உறவினரின் உதவியுடன் ஒரு ஊரில் கடை அமைக்கிறார்கள். தனது உறவினரின் பெண்ணான செம்பொண்ணை (சத்யகலா) பார்க்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். தங்கள் ஆட்டு மந்தையில் இருந்து ஆட்டை திருட வரும் மூன்று திருடர்களிடன் நட்பு மாயனுக்கு கிடைக்கிறது. உற்றார் உறவினர் யார் சொல்லியும் அவர்களுடனான நட்பை தொடர்கிறார் மாயன்.

கூடா நட்பால் குடி பழக்கத்திற்கு ஆளாகும் மாயனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்று முடிவு செய்கிறது மாயனின் குடும்பம். அதன் படி செம்பொண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்படுகிறது.

அடிக்கடி திருட்டு வேலையில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்லும் மூன்று திருடர்களும், ஒரு பெரிய திருட்டை அறங்கேற்றிவிட்டு செம்பொண்ணு ஆட்டு மந்தையில் ஒளிந்துக்கொள்கிறார்கள். அவர்களை தேடி வருகிறவர்ளுக்கு அவர்களை அடையாளம் காட்டிக்கொடுகிறார் செம்பொண்ணு. ஜெயிலில் சித்ரவதை அனுபவிக்கும் திருடங்கள் இந்த நிலைக்கு அந்த பெண்தான் காரணம், அவளை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள். அவர்களுக்கு செம்பொண்ணு மாயனின் மனைவி என்று தெரியவருகிறது. வஞ்சகமா, நட்பா என்று யோசிக்கும் திருடர்கள் வஞ்சகம்தான் முக்கியம் என செம்பொண்ணுவை தீர்த்து கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் செம்பொண்ணை என்ன செய்தார்கள், மாயன் என்னவானான் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மண்வாசம் மாறாமல் மண்மொழியை இயல்பாகவே கடத்தி இருக்கிறார் இயக்குநர். அன்றைய காலகட்டத்தில் இந்த மக்களின் வாழ்வியலில் எந்மாதிரியான திருமண முறைகள் கையாளப்பட்டது. போன்றவற்றை விவரிக்கிறது இப்படம். நட்பு, காதல், துரோகம், குடும்ப உறவு என எடுத்துக்கொண்ட எல்லா களத்தையும் நேர்மையாகவும் அழகாகவும் கையாண்டு இருக்கிறார் இயக்குநர். உண்மை சம்பவங்களை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட கதை என்றாலும் புனைவுகள் சேர்த்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற அறிவிப்பு கொடுக்கப்பட்டாலும் புனைவுகளை நம்மால் கண்டுடிப்பிடிக்க இயலாதவாறு கதை ஓட்டத்தை அமைத்து அசத்தி இருக்கிறார்.

இயல்பாகவே மண்சாந்த படங்களோடு மக்கள் ஒன்றிப்போவது வழக்கம் இந்த படத்திலும் கதையோடு பயனிக்க முடிகிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெருகிறார். நாயகியாக நடித்திருக்கும் சத்யாகலா படத்தையே தாங்கி பிடிக்கிறார். கம்பீரமான பேச்சாலும், மிடுக்கான நடிப்பாலும் கவர்ந்திழுக்கும் இவர் படத்தின் இன்னொரு ஹீரோவாகிரார். காதல், ஊடல், கூடலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெறுகிறார். சிறு சிறு கதாபாத்திரங்களில் வருகிறவர்கள்கூட கவனம் பெருகிறார்கள். தென்மாவட்டங்களின் நிலத்தை காட்சிப்படுத்தி கதையோடு கடத்துகிறது குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. ஜித்தின் கே ரோஷனின் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தொரட்டி தென்மாவட்ட எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்