முகப்புவிமர்சனம்

ராஜாவாக வந்தாரா சிம்பு? - 'வந்தா ராஜாவாதான் வருவேன்' விமர்சனம் - "Vantha Rajavathaan Varuven" Movie Review

  | Saturday, February 02, 2019

Rating:

ராஜாவாக வந்தாரா சிம்பு? - 'வந்தா ராஜாவாதான் வருவேன்' விமர்சனம் -
 • பிரிவுவகை:
  ஆக்‌ஷன் காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  சிம்பு, பிரபு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன்
 • இயக்குனர்:
  சுந்தர். சி
 • தயாரிப்பாளர்:
  லைகா
 • பாடல்கள்:
  ஹிப் ஹாப் தமிழா ஆதி

"வந்தா ராஜாவா தான் வருவேன்" எனும் சிம்பு உண்மையிலேயே ராஜாவாக வந்திருக்கிறாரா என்பதை விட, அவர் திட்டமிட்டு வந்துவிட்டார் என்பது தான் இதில் சிறப்பு.

தெலுங்கில் பவன் கல்யான் நடிப்பில் மெகா ஹிட்டடித்த "அத்தரின்டிக்கி தரேதி" திரைப்படத்தின் ரீமேக் தான் "வந்தா ராஜாவா தான் வருவேன்" . சுந்தர்.C இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையில், சிலம்பரசன், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், ரோபோ ஷங்கர், யோகிபாபு மற்றும் "பல" நட்சத்திரங்கள் நடிப்பில் படம் இந்த வாரம் வெளியாகிவுள்ளது. வழக்கம் போல் சுந்தர்.C படத்திற்கே உரித்தான, நட்சத்திர பட்டாளம், லாஜிக் மீறல், காமெடி, கிளாமர் ஹீரோயின் என அழுத்துப்போன அதே டெம்ப்ளேட்டில் வந்திருக்கும் இந்த படத்திற்கு புதுமை என்றால் அது சிம்பு மட்டும் தான். பல நாட்களுக்கு பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தாலும், இந்த படத்தை அவரது ரீ என்ட்ரி எனலாம்.

ஸ்பெயினில் பல லட்சம் கோடிக்கு வாரிசாக இருக்கும் ஆதி, சிறுவயதில் குடும்ப பிரச்சனையால் பிரிந்து சென்ற தன் அத்தையை, தன் தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற மீண்டும் அழைத்து வந்து குடும்பத்தை ஒன்று சேர்ப்பதாக வாக்கு கொடுப்பதில் படம் ஆரம்பிக்கிறது. அதற்காக சென்னை வந்து, தன் அத்தையின் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து அவரது அன்பை பெற்று, சமாதான படுத்துவது தான் திரைக்கதை. இதற்குள் காதல், காமெடி என கலந்து சுந்தர்.C ஒரு மசாலா படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

பழைய கதை , அதைவிட பழைய திரைக்கதை என சலிப்பு தட்டும் அம்சங்கள் படம் முழுவதும் நிறைந்திருந்தாலும், ஒவ்வொரு சீனிலும் நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்து இருப்பதால் பெரிதாக அலுப்புதட்டவில்லை. சிம்புவிடம் இதை விட அதிகமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதை நன்றாக உணர முடிகிறது. ஆனால் அவர் இந்தபடத்திற்கு இது போதும் என்று உணர்தவர் போல் தெரிகிறார். சில கௌண்டர் காமெடிகள், அவரை ட்ரோல் செய்யும் காமெடிகளை தவிர எதுவும் பெரிதாக கவரவில்லை. அவருக்காக சில இடங்களில் திணிக்கப்பட்ட மாஸ், பஞ்ச் வசனங்கள் வரும் காட்சிகள் எதனோடும் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இருந்த ஒரே சீன் கிளைமாக்ஸ் தான். அதில் அவர் நன்றாக ஸ்கோர் செய்தும் உள்ளார். ஆனால் அவரது எடை, அங்கும் பழைய சிம்புவை பார்க்கவிடாமல் செய்கிறது.

அவருக்கு அடுத்து ரோபோ ஷங்கர், யோகி பாபு வரும் காட்சிகள் தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடிகளை கேட்க முடியாத அளவிற்கு கைதட்டல் சத்தம் கேட்க்கிறது. அதுவும் போக அவர் வந்தாலே சிலர் சிரிப்பது இந்த படத்திற்கு ப்ளஸ் (காமெடிகளே இல்லையென்றாலும்). எந்த கதாபாத்திரம் என்றாலும் வெளுத்துவாங்கும் ரம்யா கிருஷ்ணனை இந்த படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. கதையே அவரது கதாபாத்திரத்தை சுற்றி அமைக்கபட்டிருந்தாலும் அவர் வெறும் கெஸ்ட் ரோல் போலவே தெரிவது மிகப்பெரிய மைனஸ். பிரபு, நாசர், சுமன் அவர்களின் கதாபாத்திரமும் அழுத்தமில்லாமலே நகர்கிறது.

கதாநாயகிகளாக கேத்ரின் தெரஸா, மேகா ஆகாஷ் இருவரும் படத்தில் "இருக்கிறார்கள்". கேத்ரின் தெரஸா சில காட்சிகள் வந்து போகிறார். மேகா ஆகாஷ் பல காட்சிகளில் வந்து போகிறார். மொத்தத்தில் இருவரும் வந்து மட்டுமே போகின்றனர்.

ஸ்டண்ட் காட்சிகள் தெலுங்கு படத்தை பார்ப்பதை போல் இருந்தாலும் சில இடங்களில் அதை எடுத்த விதம் அருமை. படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் இசை தான். ஹிப் ஹாப் தமிழா பாடல்களுக்கு எடுக்கும் சிரத்தை பின்னனி இசைக்கு எடுப்பதில்லையோ என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த படத்தில் பாடல்களுக்கும் அவர் பெரிதாக மெனக்கெடவில்லை போலும். சிலம்பரசன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பின்னனி அல்லது பாடல்கள் இரண்டில் ஒன்று கண்டிப்பாக பெஸ்ட்டாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இரண்டிலும் படம் சறுக்குகிறது.

மொத்தமாக படத்தில் பார்த்து அலுத்த பல விஷயங்கள் இருந்தாலும், போர் அடிக்கும் இடங்களில் திடீரென வரும் சில காமெடிகள் ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்கிறது. நல்லா இருக்கா, நல்லா இல்லையா என ரசிகர்களின் குழப்பத்தில் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம் என்ற விமர்சனத்தையே இந்த படம் வெகுஜன ஆடியன்ஸிடம் பெறுகிறது.

படம் முழுக்க கலகலப்பான ராஜாவாக சிம்பு வந்திருந்தாலும், சில காட்சிகளில் வரும் எத்தி போன்ற ஸ்டைலிஷான, கெத்தான சிம்புவை தான் அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அது அடுத்தடுத்த படங்களில் நிகழும் எனலாம்.

"வந்தா ராஜாவா தான் வருவேன்" சிம்புவின் ரசிகர்களை கவர வாய்ப்புள்ளது. ஆனால் இதே எடையில் அடுத்தடுத்த படங்களில் வந்தால் அவர்களின் ஆர்வத்தையும், கொண்டாட்டத்தையும் குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் சண்டை, நடன காட்சிகளில் இந்த சிம்புவை பார்க்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சிம்பு கேரியருக்கு திரும்பி வந்ததை போல் பழைய கெட்டப்புக்கும் திரும்பி வர "ஆல் த பெஸ்ட்" சொல்லிக்கொண்டு, தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு "தேங்க்ஸ்" சொல்லிக்கொண்டு, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு "சாரி" சொல்லி கொள்கிறோம்.......

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்