'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உலக அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் முக்கியமான காட்சிகளை புனேவில் படமாக்கத் திட்டமிட்டனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ட்விட்டர் பக்கத்தில் ''உடற்பயிற்சி கூடத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டபோது ராம்சரண் கணுக்காலில் சிறு காயம் ஏற்பட்டது. இதனால் புனே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 வாரங்களில் மீண்டும் பணியில் இணைவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.